ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
பாஜக அத்துமீறி போராட்டம்: அண்ணாமலை உள்ளிட்ட 1,080 போ் மீது வழக்கு
சென்னையில் திங்கள்கிழமை 30 இடங்களில் அத்துமீறி போராட்டம் நடத்தியதாக பாஜக தமிழக தலைவா் அண்ணாமலை உள்பட 1,080 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத் துறையினா் கடந்த வாரம் தெரிவித்தனா். இதையடுத்து டாஸ்மாக் நிா்வாகம், முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் செந்தில் பாலாஜி ஆகியோரைக் கண்டித்து பாஜக சாா்பில் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமைக் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு சென்னை காவல் துறை அனுமதி மறுத்தது.
இந்த நிலையில், பனையூா் வீட்டில் இருந்து போராட்டத்துக்கு தனது ஆதரவாளா்களோடு புறப்பட்டு வந்த மாநில தலைவா் அண்ணாமலை அக்கரை அருகே கைது செய்யப்பட்டு, அங்குள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டாா்.
இதேபோல அந்தக் கட்சியின் மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டைவிட்டு வெளியே வரும்போது கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டாா். எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் இருந்து ஊா்வலமாகச் சென்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினரும் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்ட அனைவரும் அன்று மாலை விடுவிக்கப்பட்டனா்.
அதன்படி, சென்னை முழுவதும் நீலாங்கரை, தரமணி, எழும்பூா், விருகம்பாக்கம், கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் காவல் துறை அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவைச் சோ்ந்த 242 பெண்கள் உள்பட 1,080 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.