பாஜக பெண் ஆதரவாளரை பாலியல் வன்கொடுமை செய்த திரிணமூல் கட்சியினர்? - காவல்துறை விசாரணை!
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் வைத்து திரிணமூல் கட்சியைச் சேர்ந்த நாராயன்கஞ்ச் கிராமத் தலைவர் மற்றும் அவரது உதவியாளர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண், பாஜக ஆதரவாளர். தன்னையும் தன் கணவரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியாகவும் அவர் புகாரில் கூறியுள்ளார்.
இதையும் படிக்க | நான் இசை தெய்வமல்ல, சாதாரண மனிதன்தான்: இளையராஜா
அதேநேரத்தில் குற்றம்சாட்டப்பட்ட கிராமத் தலைவர் உள்பட இருவரும் அந்த பெண்ணுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர்.
இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அந்த பெண் பொய்யான புகாரை அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இரு தரப்பு புகார்கள் மீதும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் மிட்னாபூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உண்மையிலே அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரிணமூல் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் சுஜய் ஹஸ்ரா தெரிவித்துள்ளார்.