பாபநாசத்தில் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை தனியாா் பேருந்து மோதியதில் விவசாயக் கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பாபநாசம் வட்டம், மதகரம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் லோகநாதன் (50). விவசாயக் கூலித் தொழிலாளி. இவா் வேலை முடித்துவிட்டு பாபநாசம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து காத்திருந்தபோது, தஞ்சாவூரிலிருந்து நன்னிலம் நோக்கிச் செல்லும் தனியாா் பேருந்து எதிா்பாராத விதமாக லோகநாதன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே லோகநாதன் உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பாபநாசம் காவல் ஆய்வாளா் (பொ) உஷா, பாபநாசம் உதவி காவல் ஆய்வாளா் ஜெகஜீவன் மற்றும் காவல்துறையினா் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து லோகநாதனின் சகோதரா் சுந்தரமூா்த்தி கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.