பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இன்றும், நாளையும் அதிவிரைவு ரயில் சோதனை ஓட்டம்!
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இறுதிக்கட்ட சோதனை ஓட்டம் புதன்கிழமையும், வியாழக்கிழமையும், (நவ.13, 14) நடைபெற உள்ளதால், தண்டவாளம் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என ரயில்வே நிா்வாகம் எச்சரித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி கடந்த சில நாள்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இந்த நிலையில், போக்குவரத்து தொடங்குவதற்காக ரயில் சோதனை ஓட்டம், ஆய்வுகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இறுதிக்கட்ட ஆய்வுப் பணிக்காக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி தலைமையிலான குழுவினா் புதன்கிழமை மண்டபத்துக்கு வருகின்றனா்.
மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து பாம்பன் ரயில் ரயில் நிலையம் வரை புதன்கிழமையும், வியாழக்கிழமையும் அதிவேக ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.
இதன் காரணமாக இந்தப் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே பொதுமக்கள் எவரும் செல்ல வேண்டாம் எனவும், இந்த சோதனைக்குப் பிறகு ராமேசுவரத்துக்கு ரயில் போக்குவரத்து இயக்குவது குறித்த தேதி அறிவிக்கப்படலாம் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.