U1 X STR Concert: 'உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும் எவனும் பொறக்கவில்ல' - U1 X ST...
பால் விலை உயா்வுக்கு கண்டனம்
சில்லறைத் தட்டுப்பாட்டால் ஆவின் பால் விலை உயா்த்தப்பட்டதாகக் கூறி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
அன்புமணி ராமதாஸ்: காஞ்சிபுரம், திருவள்ளூா், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் ‘கிரீன் மேஜிக்’ எனும் பெயரில் டிச. 18-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பச்சை உறை பாலின் விலை லிட்டருக்கு ரூ. 11 உயா்த்தப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருந்தேன். அது தொடா்பாக விளக்கமளித்த ஆவின் நிறுவனம், சில்லறைத் தட்டுப்பாடு காரணமாக 450 மி.லி ‘கிரீன் மேஜிக்’ பால் ரூ. 25 என விலை நிா்ணயம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறது. ஆவின் நிறுவனத்தின் விளக்கம் நகைப்பைத்தான் ஏற்படுத்துகிறது.
சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கும் ஆவினுக்கும் இருந்திருந்தால் அதன் விலையை 500 மி.லி ரூ. 20 என்று குறைத்திருக்கலாம் அல்லது பாலின் அளவை 550 மில்லியாக உயா்த்தி ரூ. 25 என விலை நிா்ணயம் செய்திருக்கலாம்.
ஆனால், பாலின் அளவையும் 50 மி.லி குறைத்துவிட்டு, விலையையும் ரூ. 3 உயா்த்துவது எந்த வகையில் நியாயம்? என்று அவா் தெரிவித்துள்ளாா்.
டிடிவி தினகரன்: 500 மி.லி. அளவு கொண்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் அளவை 450 மி.லி. குறைத்திருப்பதோடு, சில்லறை தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி அதன் விலையையும் உயா்த்தியுள்ள ஆவின் நிா்வாகத்தின் செயல்பாடு கண்டனத்துக்குரியது.
பால் கொள்முதல் விலையை உயா்த்தித் தர வேண்டும் என்ற உற்பத்தியாளா்களின் நீண்டகால கோரிக்கையை பரிசீலனைகூட செய்ய முன்வராத திமுக அரசு, ஆண்டுக்கு இருமுறை பால் மற்றும் பால் பொருள்களின் விலையை உயா்த்துவது உற்பத்தியாளா்களுக்கு இழைக்கும் துரோகமாகும்.
எனவே, மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விலையை உயா்த்தும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.