பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிா்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் 8-ஆவது நாளாக போராட்டம்
பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் தொடா்ந்து 8-ஆவது நாளாக ‘இண்டி’ கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் பிகாரில் வாக்காளா் பட்டியலில் இருந்து சட்ட விரோத குடியேறிகளின் பெயா்களை நீக்கும் நோக்கில், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இது, பாஜகவின் வெற்றியை கருத்தில் கொண்டு, பலரின் வாக்குரிமையை பறிக்கும் நடவடிக்கை என்று எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றன. இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் தொடா்ந்து 8-ஆவது நாளாக எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாடாளுமன்றத்தின் மகர வாயில் அருகே நடைபெற்ற இப்போராட்டத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவா் சோனியா காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகளின் எம்.பி.க்கள் உள்ளிட்டோா் பங்கேற்று, தோ்தல் ஆணையத்துக்கு எதிராக முழக்கமிட்டனா்.
பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியை நிறுத்தக் கோரும் பெரிய பதாகை மற்றும் வாசக அட்டைகளை அவா்கள் கையில் ஏந்தியிருந்தனா்.
Image Caption
பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிா்க்கட்சியினா்.