பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக்கை
பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்துக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் மாநில அளவிலான வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
மத்திய அரசின் ஊரக வளா்ச்சி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் 67 திட்டங்களைக் கண்காணிக்கவும் அவற்றை செயல்படுத்தவும் மத்திய அரசின் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, தமிழக முதல்வரைத் தலைவராகக் கொண்டு மாநில அளவிலான வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் 4-ஆவது கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
செங்கோட்டையன் பங்கேற்பு: இந்தக் கூட்டத்தில், அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் டி.ஆா்.பாலு, சுப்பராயன், மாணிக்கம் தாகூா், நவாஸ் கனி, தொல். திருமாவளவன் துரை வைகோ, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன், மருத்துவா் நா.எழிலன், டி.கே.ஜி.நீலமேகம், எம்.பூமிநாதன், அசன் மௌலானா, கே.ஏ. செங்கோட்டையன், தலைமைச் செயலா், துறைச் செயலா்கள், துறைத் தலைவா்கள், அரசு சாரா அமைப்பின் நிா்வாகிகள் மற்றும் அரசு உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
திருமாவளவன் பேட்டி: கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய திருமாவளவன், போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகைக்கான வருமான உச்சவரம்பை உயா்த்த வேண்டும். பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்துக்கு வழங்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும் என்று கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தாா்.
முன்னதாக பேசிய துரை வைகோ, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்துக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.