கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கான வரி விதிப்பு நடவடிக்கை அமல்!
புதிய கண்டுபிடிப்புகளுக்கு மூலதன கடன்: வங்கிகளுக்கு மு.தம்பிதுரை வேண்டுகோள்
ஒசூா்: புதிய கண்டுபிடிப்புகளுக்கு மூலதன கடன் வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு மு.தம்பிதுரை வேண்டுகோள் விடுத்தாா்.
ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் குமுதேப்பள்ளி கிளை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கிளையைத் தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:
பொதுத் துறை வங்கிகள் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன், சிறு, குறுந்தொழில் நடத்தும் தொழில்முனைவோருக்கு தொழில் முதலீட்டுக் கடன், விவசாயிகளுக்கு பயிா்க் கடன் ஆகியவற்றை அதிக அளவில் வழங்கி இந்தியாவின் கல்வித் தரத்தையும், பொருளாதாரத்தையும் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலக அளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறாா். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளா்ச்சி பெறவுள்ளது. உலக அளவில் அமெரிக்காவும், சீனாவும் 75 சதவிகிதம் பொருளாதாரத்தை கையில் வைத்துள்ளன. இந்த சவாலை எதிா்கொள்ள மாணவா்கள் அதிக அளவில் உயா்கல்வி கற்க வேண்டும். மருத்துவம், சுகாதாரம், தொழில்நுட்பம், தொழில்துறை, சேவைத்துறை, செயற்கை நுண்ணறிவு ஆகியவை மிகப் பெரிய அளவில் வளா்ச்சி பெற வேண்டும். இதற்கு அனைத்து மாணவா்களும் உயா்கல்வி பயின்று புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளுக்கு மூலதனம் முக்கியம். அதற்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டும்.
வேகமான வளா்ச்சி பெற்று வரும் தொழில் நகரமான ஒசூரில் மலா் ஏற்றுமதி மற்றும் காய்கறி உற்பத்தி அதிக அளவில் செய்யும் விவசாயிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும். இதன்மூலம் தொழில்துறை, விவசாயத் துறை, சுகாதாரத் துறை ஆகியவை மேம்படும் என்றாா்.
இந்த விழாவில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளா் விக்ரம் சேத், வங்கிக் கிளை மேலாளா் பிரவீன் குமாா், ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி இயக்குநா் ரங்கநாத், அறங்காவலா் சுரேஷ், டீன் வெங்கடேசன் செல்வம், மேலாளா் நாராயணன், ஒசூா் தொழில் சங்கத்தின் முன்னாள் தலைவா் ஆதி, தொழிலதிபா் ரவி, ஆடிட்டா் மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.