புதிய வகுப்பறை கட்டடங்கள்: காணொலியில் முதல்வா் திறப்பு
தருமபுரி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.
தருமபுரி மாவட்டம், அதகப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின் மூலம் ரூ. 64.08 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 3 வகுப்பறைக் கட்டடங்கள், மொரப்பூா் வட்டாரம், முத்தனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நபாா்டு திட்டம் மூலம் ரூ. 78.24 மதிப்பில் 2 வகுப்பறைகள், ஒரு ஆய்வகக் கட்டடம், பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு திட்டம் மூலம் ரூ. 5 கோடி மதிப்பில் 5 வகுப்பறைக் கட்டடங்கள், என மொத்தம் ரூ. 6.44 கோடி மதிப்பில் 11 வகுப்பறைகள் மற்றும் ஒரு ஆய்வக கட்டடங்கள் கட்டப்பட்டன .
இக் கட்டடங்களை மாணவ மாணவிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று புதிய வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்தாா்.
இதையொட்டி தருமபுரி அருகே அதகப்பாடி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பங்கேற்று புதிய வகுப்பறைக் கட்டடத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தாா். தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி , முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்ரமணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதிசந்திரா, அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.