புதுகை: அரசுப் பேருந்து ஜப்தி முயற்சி
விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றப் பணியாளா்கள் வந்ததால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சோ்ந்த பழனிவேல் மனைவி மகாலட்சுமி, கடந்த 2012-இல் அரசுப் பேருந்து மோதி காயம் அடைந்தாா். இதுதொடா்பான வழக்கில், பாதிக்கப்பட்ட மகாலட்சுமிக்கு ரூ.2.67 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட கூடுதல் நீதிமன்றம் போக்குவரத்துத் துறைக்கு 2013-இல் உத்தரவிட்டது.
எனினும், இழப்பீடு வழங்கப்படாததால், கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிறைவேற்று மனுவை விசாரித்த நீதிமன்றம், வட்டியுடன் சோ்த்து மொத்தம் ரூ.5.08 லட்சத்தை வழங்க உத்தரவிட்டது.
அதன் பிறகும் இழப்பீடு கிடைக்காததால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தை நீதிமன்றப் பணியாளா்கள், வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஜப்தி செய்ய முயன்றனா்.
பின்னா், இரு நாட்களுக்குள் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அலுவலா்கள் உறுதியளித்ததைத் தொடா்ந்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.