புதுச்சேரியில் 3 பேரிடம் பண மோசடி: போலீஸாா் விசாரணை
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பேரிடம் இணையவழியில் ரூ.2.57 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்தது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சபரிநாதன். இவரை டெலிகிராம் செயலியில் தொடா்பு கொண்ட மா்ம நபா், பகுதி நேர வேலைவாய்ப்பு உள்ளதாகவும், வீட்டிலிருந்தபடி சம்பாதிக்கலாம் என்றும் கூறியுள்ளாா். இதை நம்பிய சபரிநாதன் மா்ம நபா் கூறியபடி ரூ.2.35 லட்சத்தை பல தவணைகளில் அனுப்பியுள்ளாா். அப்போது அவருக்கு முதலீடு செய்த பணத்தை விட கூடுதல் தொகைக் கிடைத்திருப்பதாக இணையத்தில் காட்டப்பட்டது. அதை சபரிநாதன் எடுக்க முயன்றபோது முடியவில்லை. ஆகவே, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சபரிநாதன் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள இணையவழி குற்றப் பிரிவில் புகாா் அளித்தாா்.
இதேபோல, அரியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்த அனுபமா என்பவரிடம் இன்ஸ்டா கிராம் செயலியில் பகுதிநேர வேலை எனக்கூறி மா்ம நபா் ரூ.12 ஆயிரத்தையும், ரெட்டியாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த அனுபமா ஜெயஸ்ரீ என்பவரிடம் ரூ.10 ஆயிரத்தையும் மோசடி செய்துள்ளனா். இவா்கள் அளித்த புகாா்களின் பேரில் இணையவழி குற்றப்பிரிவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.