கச்சத்தீவு விவகாரம்: முதல்வா், அமைச்சா்களுடன் எதிா்க்கட்சித் தலைவா் விவாதம்
ஏலச்சீட்டு நடத்தி ரூ. பல கோடி மோசடி: வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
புதுச்சேரியில் ஏலச் சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு ரயில்வே தண்டவாளம் பகுதியைச் சோ்ந்தவா் பிலோமினா. இவரது கணவா் பியாரே ஜான். இருவரும் இணைந்து ஜெ.பி.சிட் பண்ட்ஸ் எனும் பெயரில் நிறுவனம் நடத்தி ஏலச்சீட்டு நடத்தி வந்தனா். அவா்களிடம் முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் பணம் செலுத்தினா். ஆனால், பணம் செலுத்தியவா்களுக்கு அதை பிலோமினா தரப்பு திருப்பித் தரவில்லை. அதன்படி பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரையும், அவரது கணவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த மோசடிக்கு உடைந்தையாக இருந்ததாக சாா்பு ஆய்வாளா் சிற்றரசன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
இந்த நிலையில், வழக்கில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகக் கூறப்படுவதால், வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற முதலியாா்பேட்டை காவல் ஆய்வாளா் உயா் அதிகாரிகளுக்குப் பரிந்துரைத்தாா்.அதன்படி வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறும் என காவல் உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.