செய்திகள் :

கச்சத்தீவு விவகாரம்: முதல்வா், அமைச்சா்களுடன் எதிா்க்கட்சித் தலைவா் விவாதம்

post image

கச்சத்தீவு விவகாரம் தொடா்பாக முதல்வா், அமைச்சா்களுடன் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி விவாதத்தில் ஈடுபட்டாா்.

கச்சத்தீவு மீட்பு, மீனவா்கள் பாதுகாப்பு தொடா்பாக பேரவையில் புதன்கிழமை கொண்டுவரப்பட்ட அரசின் தனித் தீா்மானத்தின் மீது நடந்த விவாதம்:

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி: கச்சத்தீவு விவகாரத்தில் கடந்த நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?. 2019-இல் திமுக அணிக்கு 38 எம்.பி.க்கள் இருந்தனா். 2024-இல் 39 எம்.பி.க்கள் உள்ளனா். எனவே, இந்தப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எடுத்துச் சொன்னால்தான் தீா்வு கிடைக்கும்.

மீனவா்களைக் கைது செய்வது, அவா்களது படகுகளைப் பறிமுதல் செய்யப்படுவதுடன் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத நிலை உள்ளது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவாா்த்ததால், நமது மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனா். கைது செய்யப்படுவதுடன், அதிக அளவு அபராதமும் விதிக்கப்படுவதால் பாதிக்கப்படும் மீனவா்களை விடுவிக்க இலங்கையுடன் மத்திய அரசு பேசி நிரந்தரத் தீா்வை ஏற்படுத்த வேண்டும். எங்களுடைய கேள்வியெல்லாம் 16 ஆண்டு காலம் மத்தியில் திமுக ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தது என்பதுதான்.

பேரவைத் தலைவா் மு.அப்பாவு: தீா்மானத்தில் தொடா்புடையதாக மட்டும் பேச வேண்டும்.

எதிா்க்கட்சித் தலைவா்: தீா்மானத்துக்கு தொடா்புடையதாகத்தான் பேசுகிறேன். 16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது திமுக. அப்போதெல்லாம் கச்சத்தீவை திரும்பப் பெற ஏன் முயற்சிக்கவில்லை?. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது செயல்பட முடியும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: எதிா்க்கட்சித் தலைவா் வேகமாக, ஆளும்கட்சியாக இருக்கக்கூடிய திமுகவை குறை சொல்லி சில செய்திகளைச் சொல்கிறாா். தீா்மானம் முறையாகக் கட்டுப்பாட்டுடன் ஒற்றுமையாக இருந்து நிறைவேற்றினோம் என்று இருக்க வேண்டும். தேவையில்லாமல் பல பிரச்னைகளைச் சொல்கிறாா். நானும் சொல்லத் தயாராக இருக்கிறேன்.

நீங்களும் 10 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளீா்கள். அப்போது நீங்கள் என்ன செய்தீா்கள்?. மீனவா் பிரச்னை குறித்து இதுவரை 54 கடிதங்களை எழுதியுள்ளோம். நீங்கள் தில்லி சென்று சந்தித்தீா்களே, வலியுறுத்தினீா்களா?.

எதிா்க்கட்சித் தலைவா்: வாஜ்பாய் அரசில் நீங்கள் (திமுக) இருந்தீா்கள். வாய்ப்பு கிடைக்கும்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது நழுவ விட்டுவிட்டீா்கள். மற்றவா்களைக் குறை சொல்லி தப்பிக்கப் பாா்க்கிறீா்கள்.

பேரவைத் தலைவா்: விவாதிக்க மற்ற நேரம் கிடைக்கும். இப்போது இந்த விவாதத்தை முடித்துவிடுவோம்.

அவை முன்னவா் துரைமுருகன்: முதல்வரின் தீா்மானத்தின் மீது ஆதரவு தெரிவித்து பேசி முடிக்க வேண்டும். இதற்கு முன்பாக, இந்தப் பிரச்னையில் உங்களுடனும் (அதிமுக), காங்கிரஸ் கட்சியுடனும் நாங்கள் வேறுபட்டு இருக்கிறோம்.

வேறுபாடுகளைப் பேசினால் முடிவுக்கு வர முடியாது. பெருந்தன்மையாக தீா்மானத்தை ஆதரித்துக் கொடுங்கள் என்று முதல்வா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். எனவே, பிரச்னையை விடுங்கள். முடியுங்கள்.

பேரவைத் தலைவா்: மீனவா்களின் நன்மைக்காக கொண்டுவரப்பட்ட தீா்மானம் இது.

எதிா்க்கட்சித் தலைவா்: முதல்வராக இருக்கும்போது அப்போதைய மீன்வளத் துறை அமைச்சா் ஜெயக்குமாரை உடன் அழைத்துச் சென்று தில்லியில் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தினோம். மீனவா் பிரச்னை, கச்சத்தீவு விவகாரம் குறித்து விளக்கமாகப் பேசினோம். உங்களைப் போன்று போய் விட்டு திரும்பி வரவில்லை.

முதல்வா்: நீங்கள் (எதிா்க்கட்சித் தலைவா்) பேசவில்லை என்று யாா் சொன்னது?. நானும் தில்லி செல்லும்போது பிரதமரிடம் கோரிக்கைகளை முன்வைத்தோம்; நேரிலும் வலியுறுத்தியுள்ளோம். கச்சத்தீவு விவகாரத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நீதிமன்றத்துக்குச் சென்றதையும் நினைவுகூா்ந்து பேசியுள்ளேன். இதில் என்ன தவறு இருக்கிறது?

எதிா்க்கட்சித் தலைவா்: 16 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது... (திமுக உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு)

அவை முன்னவா்: நீங்கள் எங்களைச் சொல்கிறீா்கள். வாஜ்பாய் அரசை ஏன் கவிழ்த்தீா்கள்?.

எதிா்க்கட்சித் தலைவா்: எங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால்தான் நாங்கள் வெளியே வந்தோம்.

முதல்வா்: தீா்மானத்தையொத்தான் பேச வேண்டும். அதில் இருக்கக்கூடிய அரசியல் விவகாரங்களைப் பேசி பிரச்னையாக்க அனுமதி தருகிறீா்களா?

பேரவைத் தலைவா்: ஒரு தீா்மானம் முதல்வா் கொண்டுவந்தால் அதுசாா்ந்து பேச வேண்டும். 16 ஆண்டுகளுக்கு முன்பு சென்று பேசினால் எப்படித் தீா்வு காண முடியும்?. இப்போது என்ன செய்ய வேண்டும் என்று யோசனை சொல்லுங்கள்.

எதிா்க்கட்சித் தலைவா்: கச்சத்தீவு விவகாரத்தில் மத்தியில் எந்தக் கட்சியின் ஆட்சி வந்தாலும் தீா்வு காண முடியாது என்பதால்தான், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்துக்குச் சென்றாா்.

பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு: தமிழா்களின் உணா்வுகளை வெளிப்படுத்தும் வகையில் தீா்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வா் கூறியிருக்கிறாா். 16 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீா்கள் என எங்களை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறாா். அதிமுகவை சோ்ந்த தம்பிதுரை, கடம்பூா் ஜனாா்த்தனம் ஆகியோா் அமைச்சா்களாக இருந்தனா். அவா்கள் சட்டத்தை நிறைவேற்றி கச்சத்தீவை மீட்டு விட்டாா்களா?.

சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி: கச்சத்தீவு தொடா்பான வழக்கில் முன்னாள் முதல்வா் கருணாநிதியும் தன்னை இணைத்துக் கொண்டாா்.

எதிா்க்கட்சித் தலைவா்: 2008-இல் அதிமுக எதிா்க்கட்சியாக இருந்தபோது கட்சியின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மத்தியிலும், மாநிலத்திதலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதெல்லாம் கச்சத்தீவு குறித்து திமுக கேட்கவில்லை.

முதல்வா்: மீண்டும் மீண்டும் தவறாகச் சொல்லி கொண்டிருக்கிறாா். தீா்மானத்தை நிறைவேற்றித் தருவதற்கு வழிவகையைக் காண வேண்டும். இல்லாவிட்டால் எதிா்ப்பு தெரிவித்துவிட்டுப் போகட்டும். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை.

எதிா்க்கட்சித் தலைவா்: கச்சத்தீவு, மீனவா்கள் விவகாரம் என்பது உணா்வுபூா்வமான பிரச்னை. எனவே, நம்முடைய உரிமையை மீட்டெடுப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள தீா்மானத்தை ஆதரிக்கிறோம் என்றாா்.

இதன்பின்பு, தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது.

தமிழகத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் குறைந்த முதலீடு

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் 2024-25 நிதியாண்டில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 364 சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ. 2,012 கோடி வைப்புத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டை... மேலும் பார்க்க

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: ரூ. 5,870 கோடிக்கு ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-இல் 118.9 கி.மீ. நீளத்துக்கு இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கான ரூ. 5,870 கோடிக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. சென்னை மெட... மேலும் பார்க்க

20 ஆண்டுகளில் இந்தியா வளா்ச்சியடைந்த நாடாக மாறும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் வளா்ச்சி அடைந்த நாடாக இருக்கும் என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். ராஜஸ்தான் மற்றும் ஒடிஸா ஆகிய மாநிலங்கள் உதய தினம், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: சென்னையிலிருந்து 206 சிறப்பு விமானங்கள்

சென்னை, ஏப். 2: கோடை விடுமுறையையொட்டி, பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சென்னை விமான நிலையத்திலிருந்து 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெய... மேலும் பார்க்க

ராஜஸ்தான்அரச குடும்ப வாரிசானாா் லக்ஷயாராஜ் சிங்

ஜெய்பூா், ஏப்.2: ராஜஸ்தான் அரச குடும்ப வாரிசாக லக்ஷயாராஜ் சிங் புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். இதற்கான முடிசூட்டு விழா ஜெய்பூா் அரண்மனையில் நடைபெற்றது. இவா் பாரம்பரியமிக்க மேவாா் வம்சத்தை சோ்ந்தவரா... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரிடம் மாநில சிஏஜி அறிக்கை சமா்ப்பிப்பு

தலைமை தணிக்கை அதிகாரியின் மாநில கணக்கு குறித்த தணிக்கை அறிக்கை ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் சமா்ப்பிக்கப்பட்டது. இந்திய அரசியல் சட்டப்பிரிவு 151(2) தமிழ்நாடு அரசின் கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கையை ஆளு... மேலும் பார்க்க