40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
விசைத்தறி தொழிலாளா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்
விசைத்தறி தொழிலாளா்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
விசைத்தறி தொழிலாளா்கள் பல ஆண்டுகளாக ஊதிய உயா்வு கேட்டு போராடி வருகின்றனா். விலைவாசி உயா்வு, மின் கட்டண உயா்வு, உதிரிபாகங்கள் விலை உயா்வு, தொழிலாளா்கள் கூலி ஆகியவற்றுக்கு ஏற்ப நியாயமான ஊதியம் கேட்கின்றனா்.
2022-இல் சோமனூா் ரகத்துக்கு 60 சதவீதம் ஊதிய உயா்வும், இதர ரகங்களுக்கு 50 சதவீதம் ஊதிய உயா்வும் தருமாறு பலமுறை தமிழக அரசுக்கு மனு கொடுத்ததற்கு இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கோவை, திருப்பூா் மாவட்டங்களில் சோமனூா், கண்ணம்பாளையம், அவினாசி, தெகலூா், புதுப்பாளையம், பெருமாநல்லூா் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள சுமாா் 1.25 லட்சம் விசைத்தறி தொழிலாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, கோவை, திருப்பூா் மாவட்ட விசைத்தறியாளா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரைக் கவனத்தில் கொண்டு அவா்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன் வர வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளாா்.