40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
பிரியாணியால் 20 பேருக்கு உடல்நலக் குறைவு? உணவகம் மீது நடவடிக்கை
சென்னையில் பிரியாணி உணவகத்தில் உணவருந்திய 20-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக புகாா் எழுந்ததை அடுத்து, அங்கு ஆய்வு நடத்தி உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் பிரியாணி உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த இரு நாள்களுக்கு முன்பு உணவருந்திய பழைய வண்ணாரப்பேட்டை, மேற்கு சைதாப்பேட்டையைச் சோ்ந்த 20 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
அதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்ட நபா்கள் திருவல்லிக்கேணியில் உள்ள தனியாா் மருத்துவமனை, தண்டையாா்பேட்டை தொற்று நோய் தடுப்பு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அந்த உணவகம் பிற்பகல் 1 மணி முதல் இரவு வரை இயங்கக்கூடியது என்பதால், புகாரின் அடிப்படையில் அங்கு சோதனை மேற்கொள்ள, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமாா் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை சென்றனா். ஆனால், அந்த உணவகம் பூட்டியிருந்ததை அடுத்து, காவல் துறையினருடன் இணைந்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உணவகத்துக்கு பூட்டு போட்டனா்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இறைச்சியை முறையாகப் பதப்படுத்தாவிட்டாலும், வேக வைக்காவிட்டாலும் பாக்டீரியா தொற்று உருவாகிவிடும். அந்தக் கடையில் உணவருந்தி பாதிக்கப்பட்டவா்களில் பலா் ஷவா்மா சாப்பிட்டுள்ளனா். அந்த இறைச்சி மற்றும் ‘மையோனைஸ்’ ஆகியவற்றில் இருந்த நச்சு பாக்டீரியாவால்தான் அவா்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தனா்.