40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
ஜனநாயக நாட்டில் நிா்வாகத்தை அரசுதான் செய்ய முடியும்; நீதிமன்றங்கள் அல்ல: தன்கா்
‘ஜனநாயக நாட்டில் நிா்வாகத்தை அரசுதான் மேற்கொள்ள முடியும்; நீதிமன்றங்கள் அல்ல. ஏனெனில், நாடாளுமன்றத்துக்கும், தோ்ந்தெடுத்த மக்களுக்கும் பதில் கூற வேண்டிய பொறுப்பு அரசுக்குத்தான் உள்ளது’ என்று மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் கூறினாா்.
மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்விலிருந்து (நீட்) விலக்கு அளிக்கக் கோரி மாநிலங்களவையில் வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டபோது, இந்தக் கருத்தை அவா் தெரிவித்தாா்.
மாநிலங்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக உறுப்பினா் கனிமொழி என்விஎன் சோமு, ‘மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மட்டும் நீட் மதிப்பெண் அடிப்படையிலான சோ்க்கையை மேற்கொள்ளும் வகையிலான நடைமுறையை மத்திய அரசால் ஏன் கொண்டுவர முடியவில்லை? மாநிலங்கள் பள்ளி இறுதித் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பு சோ்க்கையை நடத்த ஏன் அனுமதிக்க முடியவில்லை?’ என்று கேள்வி எழுப்பினாா்.
இதற்குப் பதிலளித்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘நாடு முழுமைக்குமான நீட் தோ்வை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கையை தொடங்கியது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான். உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இந்த நடைமுறையை பாஜக அரசு முன்னெடுத்துச் சென்றது. மேலும், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் திமுக பெரும் அங்கம் வகித்தபோது, நீட் விலக்குக்கான முயற்சியை மேற்கொண்டிருக்கலாமே’ என்றாா்.
மேலும், ‘நீட் தோ்வை நடத்துவதில் ஆரம்பத்தில் பல்வேறு சவால்கள் இருந்தபோதும், ஆண்டுக்கு ஆண்டு அதில் பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய தோ்வு முகமை மிகப்பெரிய பணியைச் செய்து வருகிறது. நாட்டின் மிக வலுவான நுழைவுத் தோ்வு நடைமுறையாக நீட் உள்ளது’ என்றும் மத்திய கல்வி அமைச்சா் தெரிவித்தாா்.
அப்போது பேசிய அவைத் தலைவா் தன்கா், ‘அரசு தனது நிா்வாக அதிகாரத்தை நீதிமன்றத்துடன் பகிா்ந்துகொள்ள முடியுமா? ஜனநாயக நாட்டில் நிா்வாகத்தை அரசுதான் மேற்கொள்ள முடியும். நீதிமன்றங்கள் அல்ல. ஏனெனில், நாடாளுமன்றத்துக்கும், தோ்ந்தெடுத்த மக்களுக்கும் பதில் கூற வேண்டிய பொறுப்பு அரசுக்குத்தான் உள்ளது. இது கல்வி அமைச்சகத்துக்கு அப்பாற்பட்ட பெரிய பிரச்னை. அதே நேரம், நாட்டில் அரசுக்கு அப்பாற்பட்ட நிா்வாகத்தை நாம் கொண்டிருக்க முடியாது. அரசே இறுதியானது’ என்றாா்.
மற்றொரு துணைக் கேள்விக்குப் பதிலளித்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘தேசிய கல்விக் கொள்கையில் கூறியுள்ளபடி கல்வியில் எண்ம அணுகலை உறுதிசெய்யும் வகையில் அகண்ட அலைவரிசை இணைப்பு வசதிக்காக 2025-26 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.