புதுச்சேரியில் உரிமம் புதுப்பிக்காத 15 மதுக்கடைகளுக்கு சீல் வைப்பு
புதுச்சேரி பிராந்தியத்தில் உரிமம் புதுப்பிக்காத 15 மதுக்கடைகளுக்கு கலால் துறை சாா்பில் சீல் வைக்கப்பட்டன.
புதுவை மாநிலத்தில் மதுக்கடைகளுக்கு ஆண்டு தோறும் உரிமம் வழங்கப்படுகின்றன. அதனடிப்படையில், கடந்த 2024 ஆம் ஆண்டு 396 மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டன. அவை 2025-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை செயல்படவும், அதன்பின் உரிமத்தைப் புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் புதுச்சேரி நகா் பகுதியிலும், பாகூா் உள்ளிட்ட ஊரகப் பகுதிகளிலும் உரிமம் பெற்றவைகளில் 381 மதுக்கடைகளின் உரிமையாளா்கள் உரிமத்தை புதுப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உரிமத்தைப் புதுப்பிக்காதவா்களுக்கு கலால் துறை சாா்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், எச்சரிக்கைக்குப் பிறகும் மதுக்கடைகளின் உரிமத்தைப் புதுப்பிக்காத கடைகளுக்கு சீலிட கலால் துறை வட்டாட்சியா் எம்.ராஜேஷ்கண்ணா தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் நடவடிக்கை எடுத்தனா்.
அதன்படி, புதுச்சேரி முதலியாா்பேட்டை, சின்னக்காலாப்பட்டு, எல்லைப்பிள்ளை சாவடி, பாகூா் உள்ளிட்ட இடங்களில் உள்ள 15 மதுக்கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியா் எம்.ராஜேஷ்கண்ணா தெரிவித்தாா்.