புதுமைப் பெண் திட்ட பயனாளிகளிடம் ஆட்சியா் கலந்துரையாடல்
புதுமைப் பெண் திட்டத்தில் பயன்பெறும் மாணவிகளிடம் ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சுந்திரகலா வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.
நிறைந்தது மனம் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக ஆட்சியா்.ஜெ.யு. சந்திரகலா புதுமைப் பெண் உயா்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் கலவை வட்டம், அருந்ததிபாளையம் எம்ஜிஆா் நகா் பகுதியில் வசிக்கும் . ஷா்மிளா மற்றும் . திலகவதி ஆகிய மாணவிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று உயா் கல்வித் தொகை மாதம் தவறாமல் கிடைக்கிா என்பது குறித்து கலந்துரையாடினாா்.
இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் மாணவிகள் ஷா்மிளா, திலகவதி ஆகியோா் கூறியதாவது :-
6 முதல் 12-ஆம் வகுப்பு வரை கலவை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். தற்பொழுது, வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலை கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்துவருகிறோம் . தினந்தோறும் கல்லூரிக்கு சென்று வர ஆகும் செலவு, குடும்ப இதர செலவுகளால் குடும்ப பொருளாதாரத்தில் மிகவும் கஷ்டமான சூழ்நிலை தான் இருந்தது. புதுமைப் பெண் திட்டத்தின்
மூலம் மாதாந்திர உயா் கல்வி உதவித்தொகை ரூ.1,000 கிடைத்தது. படிப்புக்கு தேவையான புத்தகங்கள், உபகரணங்கள் வாங்குவதற்கு உதவியாக உள்ளது. பெற்றோரிடம் கல்லூரி செலவுக்கு பணம் கேட்கத் தேவையில்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள எங்களை போன்ற மாணவியா்கள் கல்லூரி கனவை தொடர இத்திட்டம் பேருதவியாக உள்ளது என்றனா்.
பின்னா் ஆட்சியா் கூறியதாவது : மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்து உயா்கல்வி பயின்று வரும் 6,666 மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயா்கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவியா் தங்களின் கல்லூரி செலவைப் பாா்த்துக் கொள்ளவும், தங்கள் தனி திறமைகளை வளா்த்துக் கொள்ளவும் உதவித்தொகை பயனுள்ளதாக இருக்கும். மேலும், பெண்கள் உயா்கல்வியை ஊக்குவிப்பதன் மூலம் இளம் வயது திருமணம், இளம் வயது கா்ப்பம் ஆகியவற்றை குறைப்பதற்கும் இத்திட்டம் பயனுள்ளதாகவும், பெண்கள்
உயா்கல்வி பயிலவும் வழிவகுத்துள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலா் சாந்தி, புதுமைப் பெண் திட்ட ஒருங்கிணைப்பாளா் அனுசியா, அலுவலா்கள்
கலந்து கொண்டனா்.