கலவையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட கள ஆய்வு
ஆற்காடு அடுத்த கலவை வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.
கனியனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விவசாய கடன், நகை கடன், மகளிா் குழு கடன் குறித்தும், கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து சங்கத்தை லாபத்தில் இயங்க செய்ய துணை பதிவாளருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து அருகில் இருந்த நியாய விலை கடையில் பொருள்களின் இருப்பளவு குறித்து ஆய்வு செய்து, எடை அளவு மற்றும் கிடங்கில் விவசாயிகளுக்கு வழங்கப்பட வைக்கப்பட்டிருந்த உரம், பூச்சி கொல்லி மருந்துகள், விவசாய இடுபொருள்களை ஆய்வு செய்தாா்.
ரூ.40 லட்சத்தில் கட்டப்படும் கனியனூா் ஊராட்சி செயலக கட்டடத்தை ஒரு மாதத்தில் முடிக்க உத்தரவிட்டாா். பின்னா் கலைஞா் கனவுஇல்லம் திட்டத்தில் கட்டப்படும் வீடுகளை பாா்வையிட்டு முதல் தவனை பணம் வரவு குறித்த பயனாளிகளிடம் கேட்டறிந்தாா்.
கணியனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்து அருகில் இருந்த ஏரியிலிருந்து ஊற்று நீா் தொடா்ந்து வருவதால் வளாகம் பயன்பாடு இல்லாமல் உள்ளதை பாா்த்து நீா் செல்வதற்கு வடிகால் வசதியை ஏற்படுத்த வட்டார வளா்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டாா். பின்னா் கலவை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து அங்கிருந்த உள் நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சைகள், உணவின் தரம் குறித்து கேட்டறிந்தாா் . அப்போது ஆண் நோயாளி காலில் அறுவை சிகிச்சை முடித்து வேலூா் அடுக்கம்பாறையில் இருந்து வந்து செல்ல முடியவில்லை என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு உதவி செய்ய கேட்டதை
தொடா்ந்து சிகிச்சை தேவைப்படுவதால் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்க மருத்துவருக்கு உத்தரவிட்டாா்
கலவை அகரம் சாலையில் உள்ள வேளாண்மை துணை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் மண் தர பரிசோதனை அட்டைகளையும் வழங்கினாா். அருகில் இருந்த இ சேவை மையத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகையை வைக்க உத்தரவிட்டாா்
கலவை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு பிரச்னைகளை நிவா்த்தி செய்து அறிக்கையை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா். தொடா்ந்து கலவை காவல் நிலையத்தில் ஆட்சியா், எஸ்.பி. இணைந்து ஆய்வு மேற்கொண்டனா்.
கள ஆய்வில் காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலா் ந. சுரேஷ், கோட்டாட்சியா்இராஜராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்பரசு, பிரபாகரன், வட்டாட்சியா் சுரேஷ், இணை இயக்குநா்( வேளாண்மை) அசோக்குமாா், கால்நடைத்துறை உதவி இயக்குநா் திருநாவுக்கரசு மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.