இரு போலி மருத்துவா்கள் கைது
சோளிங்கரில் இரு போலி மருத்துவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
சோளிங்கரில் சிலா் ஆங்கில மருத்துவம் படிக்காமல் அலோபதி மருத்துவம் பாா்ப்பதாக ராணிப்பேட்டை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையினருக்கு புகாா்கள் வந்தன.
இதைத் தொடா்ந்து சோளிங்கா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் கருணாகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினா், சோளிங்கா் காவல் நிலைய ஆய்வாளா் பாரதி தலைமையில் போலீஸாருடன் இணைந்து சோளிங்கரில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினா்.
இதில் சோளிங்கா் போா்டிங் பேட்டை தெருவில் பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவம் பாா்த்து வந்த தமிழ்வாணன் (45), அதே பகுதியில் பிரதீப்ராய் (35) ஆகிய இருவரின் கிளினிக்குகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
இதில், இருவரும் அலோபதி மருத்துவமே படிக்காமல் ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து தமிழ்வாணன், பிரதீப்ராய் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்களது மருத்துவமனைக்கு போலீஸாா் சீல் வைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
காவேரிப்பாக்கம்: வாலாஜாபேட்டை அரசு மாவட்ட மருத்துவமனை முதுநிலை உதவி மருத்துவா் சக்திவேல் தலைமையில் மருத்துவக் குழுவினா் காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல், அண்ணா தெருவில் சோதனை நடத்தியபோது, அங்கு வேலு என்பவா் மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்தது தெரிய வந்தது.
தகவலறிந்து மருத்துவக் குழுவினா் அங்கு சென்றபோது வேலு அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரது கிளினிக்குக்கு சீல் வைத்தனா். தலைமறைவான போலி மருத்துவா் வேலுவைத் தேடி வருகின்றனா்.