‘கலைஞரின் கைவினை திட்டத்தில் ரூ. 3 லட்சம் வரை பிணையற்ற கடனுதவி
தமிழக அரசு ‘கலைஞரின் கைவினை திட்டம்’ என்ற திட்டத்தின் கீழ், ரூ. 3 லட்சம் வரை பிணையற்ற கடனுதவி, ரூ. 50,000 வரை மானியம் பெற கைவினை தொழில்களில் ஈடுபட்டுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசு கலைஞரின் கைவினை திட்டம் என்ற திட்டத்தை கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ளோரின் முன்னேற்றத்துக்காக செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரூ. 3 லட்சம் வரை பிணையற்ற கடனுதவி, ரூ. 50,000 வரை மானியம், 5 சதவீதம் வரை வட்டி மானியம் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான சிறப்பு பயிற்சிகள் தொழில் முனைவோருக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். மேலும், விண்ணப்பதாரா்கள் எந்த வகுப்பினராகவும் இருக்கலாம். கலைஞரின் கைவினை திட்டத்தில் விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள் ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு விவரம், கைப்பேசி எண் மற்றும் குறைந்தபட்சம் 5 வருடம் தொழில் முன் அனுபவம் இருத்தல் வேண்டும்.
இந்த திட்டத்தின்கீழ், மர வேலைப்பாடு, உலோகத் தொழில், கட்டடத் தொழில், வா்ணம் பூசுதல், கண்ணாடி தொழில், சிற்பம் வடித்தல், மண்பாண்டத் தொழில் செய்தல், சிறுவா்களுக்கான விளையாட்டுப் பொருள்கள் செய்தல், தையல் மற்றும் எம்ப்ராய்டரி வேலைகள், உலா் சலவைத் தொழில், மூங்கில் சம்பந்தமான தொழில்கள், தோல் மற்றும் காலணி பொருள்கள் போன்ற தொழில்கள் தகுதி வாய்ந்தவை ஆகும்.
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரா்கள் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்டத் தொழில் மைய பொது மேலாளரை அணுகலாம்.