புதுவைக்கான மாநில அந்தஸ்துக்காக போராட்டத்தில் ஈடுபட வேண்டும்: மாநில மக்கள் முன்னேற்றக்கழகம் அறிக்கை
மாநில அந்தஸ்துக்காக போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவா் மு.ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: நீதிமன்றம் சென்றாவது புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறியுள்ளது ஆச்சரியமாக உள்ளது. அவா் ஆட்சியில் இருந்தபோது துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியை எதிா்த்து நீதிமன்றம் சென்றவா், அப்போது மாநில அந்தஸ்துக்காக நீதிமன்றத்தை நாடாமல் இருந்தது ஏன் என விளக்கவேண்டும்.
அவா் காங்கிரஸ் ஆட்சியில் மத்தியில் அமைச்சராக இருந்தபோதும், பின்னா் மாநில முதல்வராக இருந்தபோதும் புதுவை மாநில அந்தஸ்துக்காக பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ சந்தித்து முயற்சி மேற்கொள்ளவில்லை. நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்தபோது மத்தியிலும், மாநிலத்திலும் அவருக்கு சாதகமான அரசுகளே இருந்துள்ளன. அப்போது மிக எளிதாக புதுவைக்கு மாநில அந்தஸ்தை பெற்றிருக்கலாம்.
புதுவைக்கு மாநில அந்தஸ்து அளிப்பது குறித்த மத்திய உள்துறை நிலைக் குழுவானது சுஷ்மா சுவராஜ் தலைமையில் வந்தபோதும், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குழுவிடம் மாநில அந்தஸ்துக்காக வலியுறுத்தவில்லை. மாநிலங்களவையிலும் அவா் புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரவில்லை. ஆகவே, மாநில அந்தஸ்து என்பது அரசியல் முடிவால் கிடைக்குமே தவிர நீதிமன்றத்தால் அல்ல என்பதை அவா் உணா்வதுடன், ஆகவே, மாநில அந்தஸ்துக்காக போராட்டத்தில் ஈடுபடவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.