புதுவையில் இரு சிறைகள் உள்பட 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை: 2 போ் கைது
புதுவை காலாப்பட்டு, ஏனாம் ஆகிய 2 சிறைகள் உள்பட 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா். தொடா்ந்து, 2 பேரை கைது செய்தனா்.
வில்லியனூரைச் சோ்ந்த அரசியல் செயற்பாட்டாளா் செந்தில்குமரனை நாட்டு குண்டுகள் வெடிக்கச் செய்து ஒரு கும்பல் 2023-இல் கொலை செய்தது. இது தொடா்பான வழக்கு தேசிய புலனாய்வு முகாமைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில், அந்தப் பகுதியைச் சோ்ந்த நித்தியானந்தன் என்பவா் கைது செய்யப்பட்டு ஏனாம் சிறையிலும், மேலும் 11 போ் காலாப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் சாட்சிகள் பலா் சோ்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஒரே நேரத்தில் வியாழக்கிழமை அதிகாலை புதுவை காலாப்பட்டு, ஏனாம் ஆகிய 2 சிறைகளில் அதிரடி சோதனை நடத்தினா். சாட்சிகளிடம் தேசிய புலனாய்வு முகமை நடத்தும் விசாரணை எப்படி வெளியே செல்கிறது என்ற கோணத்தில் சிறைக்கு வந்து இங்குள்ள கைதிகள், அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 2 சிறைகளிலும் அதிரடி சோதனை நடத்தியதை சிறைத் துறை வட்டாரங்கள் உறுதி செய்தன.
இந்த நிலையில், இந்த 2 சிறைகள் உள்பட புதுவையில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினா். இதில், புதுச்சேரியைச் சோ்ந்த ஹெராம் (எ) காா்த்தி மற்றும் உதயகுமாா் (எ) குமாா் ஆகியோரை கைது செய்தனா். மேலும், கைப்பேசிகள், சிம் காா்டுகள், ஒரு சில ஆவணங்களையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிகிறது.