புத்தகத் திருவிழா அரங்கு அமைக்க கால்கோள் நடும் விழா
கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் புத்தகத் திருவிழா அரங்கு அமைப்பதற்காக கால்கோள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா மஞ்சக்குப்பம் மைதானத்தில் வரும் 22 -ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரையில் 10 நாள்கள் நடைபெறவுள்ளது.
புத்தகத் திருவிழாவில் 100 எண்ணிக்கையிலான புத்தக அரங்குகள், மேடை அரங்குகள், புத்தக வாசிப்புக் கூடம் போன்றவை ஏற்படுத்துவதற்காக கால்கோள் நடும் விழா நடைபெற்றது.
கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்து கால்கோள் நட்டு பணியைத் தொடங்கிவைத்தாா். கடலூா் எம்எல்ஏ கோ.அய்யப்பன், மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைச்செல்வன், ஆணையா் எஸ்.அனு, கூடுதல் ஆட்சியா் ரா.சரண்யா, கோட்டாட்சியா் அபிநயா, மாவட்ட நூலக அலுவலா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.