புத்தாண்டு கொண்டாட்டத்தில் விசில் அடிக்கத் தடை; முகக்கவசம் கட்டாயம்! பெங்களூரு போலீஸ்
பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விசில் அடிப்பதற்கு மாநகரக் காவல்துறை தடை விதித்துள்ளது. மேலும், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை வரவேற்க ஆயத்தமாகி வருகின்றனர். ஹோட்டல்கள், பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக தில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, அந்தந்த மாநகரக் காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிக்க | நாளை புத்தாண்டு தொடக்கம்: பாதுகாப்புப் பணியில் 20,000 போலீஸாா்!
இந்த நிலையில், பெங்களூரு மாநகரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து மாநகர போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். எம்ஜி சாலையில், ஆண்டுதோறும் புத்தாண்டை கொண்டாட லட்சக்கணக்கான மக்கள் கூடும் நிலையில், 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அதேபோல், பிரிகேட், சர்ச் வீதி, இந்திரா நகர், எச்எஸ்ஆர் லேஅவுட், கோரமங்களா ஆகிய இடங்களில் 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
எம்ஜி சாலையில் இருந்து அதிகாலை 2 மணிவரை பேருந்துகளும், மெட்ரோ ரயில்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முக்கியமான பகுதிகளில் 150 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி தற்காலிக கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.