பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் நண்பன்! ரசிகர்கள் பாராட்டு!
'இனி ஒருவரே பல கடன்களை வாங்க முடியாது!' - RBI-யின் புதிய செக்... விவரம் என்ன?
'தேவைகள் இருக்கிறது...செலவுகள் இருக்கிறது' என்று ஒருவரே பல தனிநபர் கடன்களை வாங்கும் நிலை அதிகமாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது இந்திய ரிசர்வ் வங்கி தனது உத்தரவால், இந்த நடைமுறைக்கு செக் வைத்துள்ளது.
இதுவரை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் வாங்கியிருந்தவர்களின் கடன் அறிக்கையை அதாவது கடன் தொகை, வட்டி, அவர்கள் எப்போது வட்டி கட்டுகிறார்கள்...வட்டி சரியாக கட்டுகிறார்களா போன்ற தகவல்களை மாதத்திற்கு ஒருமுறை அப்டேட் செய்து வந்தது.
இதை மாற்றி, 'இனி கடன் அறிக்கையை 15 நாட்களுக்கு ஒருமுறை அப்டேட்' செய்ய வேண்டும் என்று வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
உதாரணமாக, ஒரு நபர் ஒரு தனிநபர் கடனை வாங்கி சரியான தேதியில் வட்டி கட்டாமல் போகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரது கடன் தகவல்கள் ஒரு மாதத்திற்கு ஒருமுறை தான் அப்டேட் செய்யப்படும் என்கிறபோது அந்த இடைவெளியில் அவர் வேறு சில கடன்களை கூட வாங்கலாம். அவற்றை கட்டாமல் போகவும் அதிக வாய்ப்பு உள்ளது.
ஆனால், கடன் அறிக்கை 15 நாட்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்யப்படும்போது, அவரது கடன் அறிக்கையை பார்த்து பிற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அவருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கும். இதனால், கடன்கள் கட்டப்படாமல் போவதை தவிர்க்கலாம்.
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த 15 நாள் உத்தரவால், ஒருவருக்கே பல தனிநபர் கடன்கள் கிடைப்பது இனி கொஞ்சம் சிக்கல் தான். அவரது கடன் அறிக்கை சரியாக இருந்தால் மட்டுமே, அவரால் பல கடன்களை வாங்க முடியும்.