ஆட்டு மந்தையுடன் பாஜக மகளிரணியினர் அடைக்கப்பட்டதால் சர்ச்சை!
மதுரையில் ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் கைது செய்யப்பட்ட பாஜக மகளிரணியினர் அடைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்தும் மாணவிக்கு நீதி கோரியும் பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் இன்று(ஜன. 3) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை முதல் சென்னை வரை பேரணி நடத்த மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்திருந்தார்.
இதையும் படிக்க | தடையை மீறி ஆர்ப்பாட்டம்: குஷ்பு உள்பட பாஜகவினர் கைது
ஆனால், இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. எனினும் தடையை மீறி மதுரையில் பாஜக மகளிரணித் தலைவர் உமாரதி தலைமையில் குஷ்பு உள்ளிட்ட மகளிர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்து ஆடு வியாபாரிகள் ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர். நூற்றுக்கணக்கான ஆடுகள் அருகில் அடைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுவதாக பாஜக மகளிரணியினர் புகார் தெரிவித்துள்ளனர். பாஜகவினரும் இதுகுறித்து காவல்துறையினருடன் பேசி வருகின்றனர்.
பெண்களுக்கு அசௌகரியமாக இருந்தால் இடத்தை மாற்றுவதாக காவல்துறையினர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.