வேலு நாச்சியார், கட்டபொம்மன் பிறந்த நாள்: ஆளுநர் மரியாதை!
வீரமங்கை வேலு நாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் உள்ள இருவரின் திருவுருவப் படத்திற்கு ஆளுநர் ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தில் முக்கிய பங்கு வகித்த இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை என்று அழைக்கப்படும் வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்த நாள் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த இன்று(ஜன. 3) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் இருவருக்கும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: காலனித்துவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் வேலு நாச்சியார்: பிரதமர் மோடி
இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”வீரமங்கை வேலு நாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளில் இருவருக்கும் தேசம் மரியாதை செலுத்துகிறது.
வீரம், ஞானம் மற்றும் தேசபக்தியின் உருவகங்களான இருவரும் தங்களின் ஒப்பிடமுடியாத ராணுவம் மற்றும் மூலோபாய சாதுர்யத்துடன், அடக்குமுறை பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக உறுதியுடன் போராடியது, தேசிய சுதந்திரத்துக்கான முதலாவது போராட்டத்தை தூண்டியது.
அவர்களின் நீடித்த மரபு, தேசத்தைக் கட்டியெழுப்ப நடந்து வரும் பயணத்தில் சுதந்திரம் மற்றும் நீதிசார் லட்சியங்களை நிலைநிறுத்த பல தலைமுறைகளுக்கும் வழிகாட்டியாக விளங்கி தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.” என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.