நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டா் அளவில் 7.1-ஆகப் பதிவு!
சிந்துவெளி: முதல்வர் வெளியிட்ட 3 முக்கிய அறிவிப்புகள்!
தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன.5) தொடக்கி வைத்து 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் நடைபெற்ற சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழாவில் முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆற்றிய உரை:
தமிழ்ப் பண்பாட்டை பேணிப் பாதுகாப்பதுதான் தமிழ்நாடு அரசின் தலையாய கடமை என்று உலகுக்கு உணர்த்தும் வகையில், மூன்று முக்கியமான அறிவிப்புகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் வெளியிட விரும்புகிறேன்.
* செழித்து வளர்ந்த சிந்துவெளிப் பண்பாட்டின் எழுத்து முறையை இன்னும் நம்மால் தெளிவாக புரிந்துக்கொள்ள முடியவில்லை. நூறு ஆண்டுகளைக் கடந்தும் தீர்க்கப்படாத இந்த சிந்துவெளிப் புதிர் பற்றி உலகெங்கும் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், மொழியியல் தமிழ் அறிஞர்கள் மற்றும் கணினி வல்லுநர்கள் உள்பட பலரும் இன்றளவும் பெரும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், சிந்துவெளிப் புதிருக்கான உரிய விடையைக் கண்டுபிடித்து, சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்துக்கொள்ள உதவும் வழிவகையை தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என்பது முத்தான முதல் அறிவிப்பு!
சிந்துவெளி பண்பாடு குறித்து தொடர் ஆராய்ச்சிகளை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையுடன் இணைந்து ரோஜா முத்தையா நூலகத்தின் சிந்துவெளி ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும் வகையில் தலைசிறந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஓர் ஆய்வு இருக்கை அமைக்க 2 கோடி ரூபாய் நல்கை வழங்கப்படும் என்பது இரண்டாவது அறிவிப்பு!
தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை உலகமே தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஓயாமல் உழைக்கும் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள் மட்டுமின்றி, கல்வெட்டியல் ஆய்வாளர்கள், நாணயவியல் வல்லுநர்கள் ஆகியோரையும் ஊக்கப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இது மூன்றாவது அறிவிப்பு.
இந்த மூன்று அறிவிப்புகளும் இந்தத் துறை ஆய்வுகளுக்கு வேகத்தையும், ஊக்கத்தையும் வழங்கும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.