சேலம்: விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை; வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்... அல்லல்பட...
புயல் பாதிப்புகள்.. கேட்டது ரூ. 43,993 கோடி; கிடைத்தது ரூ. 1,729 கோடி!! மக்களவையில் தமிழக எம்பிக்கள் குரல்!
ஃபென்ஜால் புயல் பாதிப்புகளுக்கு உடனடி நிவாரண நிதி விடுவிக்க மக்களவையில் தமிழக எம்பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் 14 மாவட்டங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 2,000 கோடி விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், மக்களவையில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் புயல் பாதிப்புகள் குறித்து தமிழக எம்பிக்கள் செவ்வாய்க்கிழமை உரையாற்றினர்.
திமுக எம்பி டி.ஆர். பாலு பேசியதாவது:
“தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இயற்கை பேரிடர் ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான பயிர்கள் சேதமடைந்துள்ளது.துணை முதல்வர் அனைத்து மாவட்டங்களிலும் சேதங்கள் குறித்து களஆய்வு மேற்கொண்டு தமிழகம் திரும்பிய நிலையில், பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார்.
ஒன்றரை கோடி ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 721 வீடுகள் சேதமடைந்துள்ளன. 963 கால்நடைகள் பலியாகியுள்ளன. பாலங்கள், சாலைகள், மின்கம்பங்கள், பள்ளி கட்டடங்கள், சமூக நலக் கூடங்கள் சேதமடைந்துள்ளன.
இதனை கவனத்தில் கொண்டு மதிப்பீட்டுக் குழுவை அனுப்பி ஆய்வு நடத்தின் மதிப்பீடு செய்தவுடன் நிவாரணத்தை வழங்க வேண்டும் எனக் கோருகிறேன்.”
இதையும் படிக்க : புயல் பாதிப்பு: முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் பிரதமர்!
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேசியதாவது:
“புதுவை, தமிழகத்தில் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 12 பேர் பலியாகியுள்ளனர். தமிழக முதல்வர் உடனடி நிதி கேட்டுள்ளார். ஆனால், மத்திய அரசு தொடர்ந்து வரலாற்று தவறு செய்து கொண்டுள்ளது.
2016 முதல் புயல் பாதிப்புகளுக்கு தமிழகம் ரூ. 43,993 கோடி கேட்ட நிலையில், ரூ. 1,729 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மாற்றான் மனப்பான்மையை மாற்ற வேண்டும். தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை கொடுக்க வேண்டும்.
தமிழகமும், புதுவையும் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும்போது பிரதமர் படம் பார்த்து கொண்டிருந்தது வரலாற்று தவறானது” எனத் தெரிவித்தார்.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பேசியதாவது, இந்த முறையாவது தமிழக முதல்வர் கேட்ட ரூ. 2,000 கோடியை பிரதமர் விடுவிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், மாநிலங்களவையில் மதிமுக எம்பி வைகோ, திமுக எம்பி எம்எம் அப்துல்லா உள்ளிட்டோரும் வெள்ள நிவாரண நிதி கோரி குரலெழுப்பினர்.