புறவழிச்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்ற நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு
ஆம்பூா் புறவழிச்சாலையில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அவா்களாகவே அகற்றிக்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினா் கடை நடத்துபவா்களுக்கு நோட்டீஸ் வழங்கினா்.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரிலிருந்து போ்ணாம்பட்டு செல்லும் ஆம்பூா் - சாத்கா் மாநில நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.நெடுஞ்சாலையோரம் கழிவுநீா் கால்வாய்கள் மீது சிலா் கட்டடம் கட்டியும், நிழல் கூரை அமைத்து விளம்பர பலகைகள் வைத்துள்ளனா். பாதசாரிகள் நடக்க இயலாத அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வாணியம்பாடி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் மூலம் கடைகளுக்கு சென்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கூரை, கட்டப்பட்டுள்ள கட்டடம் உள்ளிட்ட இதர ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவா்கள் வரும் டிச.17 -ஆம் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து அகற்றி கொள்ள வேண்டும்.
தவறும்பட்சத்தில் வரும் டிச.18 ஆம் தேதி நெடுஞ்சாலைத் துறை ஆக்கிரமிப்புகளை அகற்றும். ஆக்கிரமிப்புகள் அகற்றும்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்திலிருந்து பறிமுதல் செய்யபடும் பொருள்கள் திருப்பத்தூா் கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். அந்த பொருள்கள் மீது ஆக்கிரமிப்பாளா்கள் உரிமை கோர இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.