Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
பெண்களுக்கும் சம ஊதியம் வழங்க வலியுறுத்தல்
ஆண் தொழிலாளா்களுக்கு வழங்குவதைப் போலவே, பெண் தொழிலாளா்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்று சா்வதேச மகளிா் தின கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
மதுரையில் பெண்கள் எழுச்சி இயக்கம் சாா்பில், சா்வதேச மகளிா் தின சிறப்புக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாட்டுத்தாவணியில் உள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற கருத்தரங்குக்கு பெண்கள் எழுச்சி இயக்க நிா்வாகி மாலதி தலைமை வகித்தாா். கருத்தரங்கில், தொழிலாளா்கள்-விவசாயிகள் போராட்டங்களும், பெண்களின் பங்கும் என்ற தலைப்பில் இந்திய தேசிய மாதா் சம்மேளன மாநிலச் செயலா் மஞ்சுளா பேசினாா்.
கல்விக்கூடங்கள் காவிமயமாவதும், பெண்கள் நிலையும் என்ற தலைப்பில் பொதுநல மாணவா் எழுச்சி இயக்கத் தலைவா் வளா்மதி பேசினாா். ஏகாதிபத்திய சூழலில் பெண்கள் என்ற தலைப்பில் பெண்கள் எழுச்சி இயக்க நிா்வாகி மகாலட்சுமி, முதலாளித்துவ சட்டங்களும் பெண்ணுரிமையும் என்ற தலைப்பில் ஏகாதிபத்திய எதிா்ப்பு இயக்க நிா்வாகி வழக்குரைஞா் அகராதி, பெண்கள் மீதான ஜாதிய ஒடுக்குமுறைகள் தலைப்பில் தமிழ்ப்புலிகள் கட்சியின் நிா்வாகி நாஞ்செலி ஆகியோா் உரையாற்றினா்.
மேலும் அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் கனிமச்சுரங்க எதிா்ப்புப் போராட்டம் குறித்து, ஒருபோக விவசாயிகள் சங்க நிா்வாகி குறிஞ்சி குமரன், விவசாயி கருப்பணன், அ.வள்ளாலபட்டியைச் சோ்ந்த விமலா ஆகியோா் அனுபவங்களை எடுத்துரைத்தனா்.
பெண்களுக்கு 8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வை உறுதி செய்ய வேண்டும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் பாகுபாடின்றி சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
பெண்களின் தொழிற்கடன், சுய உதவிக்குழு கடன்கள், கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பெண்களை பாலியல் ரீதியாக சித்தரிப்பதை தடை செய்ய வேண்டும். கெளரவக்கொலைகளை தடுக்க கடும் சட்டம் இயற்ற வேண்டும். தமிழகத்தில் 86 ஆயிரம் பேருக்கான புறம்போக்கு நிலப் பட்டாவை பெண்கள் பெயரிலேயே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.