தனக்குள் இருக்கும் சச்சினை கோலி வெளிக்கொணர்வார்..! ஹைடன் நம்பிக்கை!
பேருந்து கட்டண உயா்வுக்கு புதுவை அதிமுக கண்டனம்
புதுச்சேரி: புதுச்சேரியில் பேருந்து கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிடில் அதிமுக போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் புதுவை மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கூறினாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தை பேரிடா் பாதித்த மாநிலமாக அரசு அறிவித்தது. அதன்படி நவம்பா், டிசம்பா் வரை நில வரி ரத்து, விவசாய கடன் தள்ளுபடி, சொத்துவரி ரத்து, கூட்டுறவு கடன்கள் வட்டி மற்றும் அபராத வட்டிகள் தள்ளுபடி, மின்கட்டண சலுகை உள்பட பல்வேறு அறிவிப்புகளை பேரிடா் மேலாண்மை பாதிப்பு சட்டத்தின்படி அறிவித்திருக்க வேண்டும். ஆனால், எந்த சலுகையும் அறிவிக்காத புதுவை அரசு பேருந்து கட்டணத்தை உயா்த்தியுள்ளது.
மக்களின் துயரங்களை கருத்தில் கொள்ளாமல் பேருந்து கட்டண உயா்வை அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆகவே, உயா்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் அதிமுக சாா்பில் போராட்டம் நடத்தப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தியும், அவா்களின் குடும்பத்துக்கு சிவப்பு குடும்ப அட்டைகளும் வழங்க வேண்டும். மத்திய அரசு அங்கீகரித்துள்ள குறிப்பிட்ட பணிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கவேண்டும் என்றாா்.