குளிர்சாதனப் பெட்டிகளில் ஒட்டப்படும் காந்தங்களால் மின்சாரக் கட்டணம் அதிகமாகுமா? ...
"பைசன் வெறும் படமல்ல; அது ஒரு உணர்வு; நமக்குள் ஏற்படும் மாற்றம்" - நடிகை அனுபமா பரமேஸ்வரன் உருக்கம்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பைசன்'. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டா பதிவு
நடிகை அனுபமா பரமேஸ்வரன் குறிப்பிட்டதாவது, “பைசன் படத்தில் 10 நாட்கள்... பைசனின் 10 நாட்கள்... என் இதயம் இன்னும் தனக்குக் கிடைத்த அன்பை எப்படித் தக்க வைத்துக்கொள்வது என்பதைக் கற்றுக்கொண்டே இருக்கிறது. சில படங்கள் வெறும் புராஜெக்ட்களாக இருப்பதில்லை, அவை ஒரு உணர்வாக, ஒரு பருவமாக, நமக்குள்ளே ஒரு அமைதியான மாற்றமாக மாறிவிடுகின்றன. பைசன் எனக்கு அப்படித்தான்.
என் வாழ்நாள் முழுவதும் நான் போற்றும் வகையில் என்னைப் பாதித்த ஒரு படம். இந்த உலகத்தில் வாழ்வதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் உணர்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “மாரி செல்வராஜ் சார், இந்தக் கதைக்கு என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. உங்கள் நம்பிக்கைக்கு, நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் நாயகன் துருவ் விக்ரமைப் பாராட்டி அவர் கூறியதாவது, “நமது சூப்பர் ஸ்டார் துருவ் விக்ரம், வாழ்த்துக்கள். இது அதிர்ஷ்டம் அல்ல... உழைப்பால் சம்பாதிக்கப்பட்டது. இந்த வெளிச்சத்தின் ஒவ்வொரு துளிக்கும் நீங்கள் தகுதியானவர்” என்று மனதார பாராட்டியுள்ளார்.

மேலும் சக நடிகையான ரஜிஷா விஜயன், இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா மற்றும் தயாரிப்பு நிறுவனங்களான அப்ளாஸ் சோஷியல், நீலம் ஸ்டுடியோஸ் ஆகியோருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இறுதியாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், “உண்மையுடன் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை அரவணைத்து, அதை இவ்வளவு கொண்டாடி, திரையில் மட்டும் இல்லாமல் உங்கள் இதயங்களிலும் இடமளித்த ரசிகர்களுக்கு நன்றி. பைசன் எப்போதும் ஸ்பெஷலாக இருக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் தனது பதிவில் அனுபமா பதிவிட்டுள்ளார்.





















