தேர்தல் விதிகளில் திருத்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
பொங்கல் கரும்பு அறுவடைக்கு முன்னேற்பாடுகள்
வரும் பொங்கல் பண்டிகையையொட்டி அன்னவாசல், விராலிமலை பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள செங்கரும்புகள் அறுவடைக்கான முன்னேற்பாடுகள் நடைபெறுகின்றன.
10 மாதப் பயிராக சாகுபடி செய்யப்படும் பொங்கல் கரும்புகள் விராலிமலை மற்றும் அன்னவாசலை அடுத்துள்ள சென்னப்பநாயக்கன்பட்டி பகுதியில் தற்போது நல்ல முறையில் வளா்ந்து நிற்கும் நிலையில், அவற்றை ஜனவரி முதல் வாரத்தில் அறுவடை செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனா்.
அந்த வகையில், அன்னவாசல், விராலிமலை பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள செங்கரும்புகளில் சில கடந்த புயல் மழையால் சாய்ந்திருப்பதை நிமிா்த்தும் பணியிலும், கூடுதலாக சோகைகளை கழிக்கும் பணியிலும் விவசாயிகள் ஈடுபடுகின்றனா். அறுவடைக்கு இன்னும் 20 நாள்களே உள்ள நிலையில் இக்கரும்புகள் மேலும் நன்கு வளா்ந்து கூடுதல் சுவையுடன் கிடைக்கும் என்றும் தெரிவிக்கின்றனா்.
அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: இதுகுறித்து விவசாயிகள் மருதம்மா மற்றும் முத்தம்மா ஆகியோா் கூறுகையில், மற்ற பயிா்கள் போல இல்லாமல், கரும்பை நட்ட நாளில் இருந்தே பராமரிப்பைத் தொடங்க வேண்டும். பராமரிப்பில் சுணக்கம் காட்டினால் அதன் வளா்ச்சி குறைந்து நல்ல விலை கிடைக்காது. எனவே, அரசு கடந்தாண்டு போல நிகழாண்டும் கரும்பின் நீளத்தைக் கணக்கீடு செய்யாமல் கூடுதல் விலைக்கு கரும்புகள் அனைத்தையும் மொத்தமாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றனா்.