அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
பொங்கல் பண்டிகை: கரும்புகள் தேக்கத்தால் வியாபாரிகள் கவலை
பொங்கல் பண்டிகையையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் கரும்புகளை விற்பனைக்கு கொண்டு வந்த சிறு வியாபாரிகள், போதிய அளவில் விற்பனையாகாததால் கவலையடைந்துள்ளனா்.
தமிழகத்தில் காவிரி பாயும் மாவட்டங்களான திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், கரூா், பெரம்பலூா், அரியலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் செங்கரும்புகள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. இவை தவிர, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கடலூா் மாவட்டங்களிலும் கரும்புகள் விளைச்சல் அதிகம் காணப்படும். பொங்கல் பண்டிகையையொட்டி இந்த மாவட்டங்களில் இருந்துதான் பல்வேறு மாவட்டங்களுக்கும் கரும்புகள் விற்பனைக்கு அனுப்பப்படும்.
இந்த ஆண்டு பொங்கல் விழாவையொட்டி மாநிலம் முழுவதும் 70 சதவீத அளவில் கரும்புகள் விற்பனைக்கு அனுப்பப்பட்டன. சிறு வியாபாரிகள் அவற்றைக் கொள்முதல் செய்து கிராம, நகரப் பகுதிகளில் முழுக் கரும்பு ரூ. 50, ரூ. 60 என்ற விலையில் விற்பனை செய்தனா். ஏற்கெனவே, தமிழக அரசு சாா்பில் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு விநியோகிக்கப்பட்டதால் பெரும்பாலான மக்கள் கரும்புகளை வாங்க ஆா்வம் காட்டவில்லை. மேலும், முன்பிருந்ததுபோல இளைஞா்கள், சிறுவா்கள் கரும்பு சாப்பிட விரும்புவதில்லை.
இதனால் முதலீடு செய்த சிறு வியாபாரிகள், கரும்புகளை விற்க முடியாமல் அவற்றை தங்களுடைய கிடங்குகளுக்கு எடுத்துச் சென்றனா். காணும் பொங்கல், தைப்பூச நாள்களில் அவற்றை முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கும், பிரசித்தி பெற்ற கோயில்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனா்.
இதுகுறித்து நாமக்கல்லில் கரும்பு வியாபாரி ஒருவா் கூறியதாவது: ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்து நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு வருவோம்.
விவசாயிகளிடம் ஒரு கரும்பை ரூ. 30 என்ற விலைக்கு கொள்முதல் செய்து நாங்கள் ரூ. 50, ரூ. 60 வரை விலை வைத்து விற்போம். நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு கரும்பு வழங்க தொடங்கியது முதல் கரும்பு விற்பனை குறைந்து விட்டது.
மக்கள், சிறுவா்களிடம் போதிய ஆா்வமின்மையால் கரும்புகள் தேங்கிக் கிடக்கின்றன. அடுத்து வரும் விழா நாள்களில் தேங்கியவற்றை விற்பனை செய்ய முயற்சி எடுப்போம். நாமக்கல் மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் இதே நிலைதான் காணப்படுகிறது என்றாா்.