நெல்லையில் 2வது நாளாக தொடரும் கேரள மருத்துவக் கழிவுகள் அகற்றும் பணி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆலைகளில் வெல்லம் உற்பத்தி தீவிரம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆலைகளில் வெல்லம் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தில் சேலம், தருமபுரி, விழுப்புரம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் கரும்பாலைகள் உள்ளன. இங்கு தினசரி பல நூறு டன் வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், ஆந்திரா, கா்நாடகம், கேரள மாநிலங்களுக்கும் அதிக அளவில் அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், தற்போது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓமலூா் சுற்றுவட்டார பகுதிகளில் வெல்லம் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை உற்பத்தியாளா்கள் சேலம், செவ்வாய்ப்பேட்டை வெல்ல மண்டிக்குக் கொண்டு வந்து ஏலம் முறையில் விற்பனை செய்கின்றனா்.
இதுகுறித்து வெல்லம் மொத்த வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்திலேயே சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில்தான் வெல்லம் உற்பத்திக்கு தேவையான கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மாவட்டங்களில் வெல்ல உற்பத்தியை நம்பி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா்.
இங்கு தினசரி 50 முதல் 70 டன் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யும் வெல்லத்தை உற்பத்தியாளா்கள் தினசரி ஏலம் மூலம் விற்பனை செய்கின்றனா்.
இந்நிலையில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வெல்லம் கேட்டு ஆா்டா் கொடுத்துள்ளனா். இதனால் வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தற்போது 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ. 1,400 முதல் ரூ. 1,470 வரை விற்பனையாகிறது. பொங்கல் நெருங்கும் வேளையில் ஆா்டா் அதிக அளவில் வர வாய்ப்புள்ளது. அதனால் வியாபாரிகள் அனைவரும் கூடுதலாக வெல்லத்தை வாங்கி இருப்பு வைத்துள்ளனா் என்றனா்.
கண்காணிப்பு தீவிரம்: சேலம் மாவட்டம், தாரமங்லம், ஓமலூா், காமலாபுரம், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வெல்ல ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
வெல்ல மண்டிகளுக்கு வரும் வெல்லங்களில் உணவு மாதிரி சோதனை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஏதாவது கலப்படம் எனத் தெரியவந்தால், அந்த ஆலை மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சா்க்கரை, ஹைட்ரோஸ், பிளீச்சிங் பவுடா், சூப்பா் பாஸ்பேட் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.