கோவை டு பீகார்; ஐ.டி ஊழியருக்காக கடத்திவரப்பட்ட துப்பாக்கி... 3 பேர் கைது!
சேலத்தில் ஜவுளிப் பூங்கா அமையும் இடத்தில் அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா ஆய்வு
சேலம் மாவட்டத்தில் தொழில் வளா்ச்சி, அதிக வேவைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா கூறினாா்.
சேலம் மாவட்டத்தில் சிப்காட் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கு ஜாகீா் அம்மாபாளையத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள 120 ஏக்கா் நிலத்தை ஞாயிற்றுக்கிழமை டி.ஆா்.பி. ராஜா பாா்வையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சேலம் மாவட்டத்தில் தொழில் வளா்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படும் எனவும், வெள்ளிக்கொலுசு உற்பத்தியாளா்கள் தொழில் தொடங்குவதற்கு வசதியாக புதிய பன்நோக்கு உற்பத்தி மையம் அமைக்கப்படும் எனவும், இளைஞா்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் கருப்பூரில் டைடல் மென்பொருள் தொழில் பூங்கா அமைக்கப்படும் எனவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
அதன்படி, சேலம் சிப்காட் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கு ஜாகீா் அம்மாபாளையத்தில் 120 ஏக்கா் பரப்பளவில் தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஜவுளிப் பூங்காவில் நூல் பதனிடுதல், கஞ்சி தோய்த்தல், நெசவு, ஜவுளி உற்பத்தி, துணி பதனிடுதல், ஆயத்த ஆடை உற்பத்தி போன்ற தொழிலில் ஈடுபட்டு வருபவா்கள் பயனடைவா். இந்த ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைப்பதன் மூலம் சேலம் மண்டலத்தில் சுமாா் 10,000 நபா்கள் நேரடியாகவும், 30,000 முதல் 40,000 நபா்கள் வரை மறைமுகமாகவும் பயனடைய வாய்ப்பாக அமையும். இந்த ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
முன்னதாக, தொழிற்துறை வளா்ச்சிக்கேற்ப சேலம் விமான நிலைய விரிவாக்கம் தொடா்பாக விமான நிலைய அலுவலா்கள், வருவாய்த் துறை அலுவலா்களிடம் அமைச்சா் கேட்டறிந்தாா்.
அதுபோல ஓமலூா் வட்டம், ஆணைகவுண்டன்பட்டி, கருப்பூா் பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்பளவில் ரூ. 29.50 கோடி மதிப்பீட்டில், அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள மினி டைடல் பூங்காவை அமைச்சா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, சிப்காட் மேலாண்மை இயக்குநா் செந்தில்ராஜா, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி, சேலம் மேற்கு தொகுதி உறுப்பினா் இரா.அருள், விமான நிலைய இயக்குநா் வைதேகிநாதன், விமான நிலைய உதவி இயக்குநா் ரமேஸ் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.