கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கான வரி விதிப்பு நடவடிக்கை அமல்!
`பொதுக் கூட்டத்துக்கு வாங்க; தங்க நாணயத்தோடு போங்க'- அதிமுக-வின் கவர்ச்சிகர அழைப்பு; வைரலான நோட்டீஸ்
ஒரு காலத்தில் தலைவர்களின் பேச்சைக் கேட்க கூட்டம் கூடியதுபோய், தற்போது, கூட்டத்துக்கு ஆட்களைச் சேர்க்கவே அரசியல் கட்சிகள் திணறிவருகின்றன. ஆடி ஆஃப்ர் போல் கவர்ச்சிகரமான பரிசுப் பொருள்களை வழங்கியும், பிரியாணி, மது விருந்து அளித்தும் கூட்டம் சேர்ப்பதை பல இடங்களில் காண முடிகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ஆம் தேதி திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அவர்கள் அமர்ந்திருக்கும் நாற்காலி இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக குழந்தைகளுடன் குடும்பமாக வந்து நாற்காலிகளை தூக்கிச் சென்ற வீடியோ சமூக வலைதங்களில் வைரலானது. தற்போது, அதைவிட கவர்ச்சிகரமான அறிவிப்பை அதிமுக வெளியிட்டுள்ளது, பேசுபொருளாகியிருக்கிறது.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், கே.சி.கருப்பண்ணன், தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்துக்கு ஆட்களைச் சேர்க்க அதிமுக நிர்வாகிகள் புதிய உத்தியைப் பயன்படுத்தி நோட்டீஸ் அடித்து வழங்கி வருகின்றனர். அதில், பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் முதல் மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு நாணயமும், 300 பேருக்கு வீட்டு உபயோகப் பொருள்களான கிரைண்டர், பீரோ, பேன், சில்வர் பாத்திரங்கள் வழங்கப்படும். கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சிறப்பு பரிசும் வழங்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸை ஊத்துக்குளி பகுதி முழுவதும் அ.தி.மு.க.வினர் விநியோகித்து வருகின்றனர். இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், "பொதுக் கூட்டத்துக்கு ஆட்களைச் சேர்ப்பது என்பது மிக சவாலான காரியமாக உள்ளது. பணத்தை வாங்கிக் கொண்டு பாதியிலேயே சென்றுவிடுகின்றனர். இதை தவிர்க்கவே கடந்த முறை இலவச இருக்கை வழங்கப்பட்டது. தற்போது, தங்க நாயணம் அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். கூட்டத்தில் கலந்து கொள்ள ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்" என்றனர்.