Ambedkar: ``எந்த இந்தியரும் சகித்துக் கொள்ளமாட்டார்.." - அமித் ஷாவுக்கு கமல்ஹாசன...
போட்டோஷூட் எடுப்பதில் முதல்வர் முனைப்பு: இபிஎஸ் விமர்சனம்
கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, போட்டோஷூட் எடுப்பதில் மட்டும் முதல்வர் ஸ்டாலின் முனைப்பாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
கேரள மருத்துவக் கழிவுகள், அந்த மாநிலத்தின் எல்லையையொட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடா் பிரச்னையாக இருந்து வருகிறது. அண்மையில் திருநெல்வேலி மாவட்டம் கோடகநல்லூா், நடுக்கல்லூா் பகுதிகளில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அபாயகரமான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கேரள மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கேரளத்திலிருந்து கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கு உரிய செலவுத் தொகையை கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வசூலிக்க வேண்டும்.
மேலும், கேரளத்தில் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கு என்னென்ன நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன? அங்குள்ள மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்ட வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து கேரள அரசு விளக்கம் அளிக்க தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, போட்டோஷூட் எடுப்பதில் மட்டும் முதல்வர் ஸ்டாலின் முனைப்பாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க |தங்கம் பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்க பதிவில்,
கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டப்பட்டு வரும் நிலையில், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தின் கல்லூர், பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்டிருப்பதற்கு எனது கடும் கண்டனம்.
கேரள முதல்வருடன் கைகுலுக்கி போட்டோஷூட் எடுப்பதில் மட்டும் முனைப்பாக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, முல்லைப் பெரியாற்றில் மாநில உரிமைகளை நிலை நாட்ட தான் திராணியில்லை என்று பார்த்தால், அண்டை மாநிலத்தின் கழிவுகள் நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்க்கக் கூட தெம்பில்லாத முதல்வராக இருக்கிறார்.
வளமிகு தமிழ்நாடு, யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல!
கொட்டப்பட்டு இருக்கக்கூடிய மருத்துவ கழிவுகளால் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளதால் அனைத்து குப்பைகளும் உடனே அகற்றப்பட வேண்டும்; இனி இதுபோன்று பிற மாநில கழிவுகள் கொட்டப்படாத அளவிற்கு திடமான நடவடிக்கைகள் திமுக அரசு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.