போப் மறைவுக்குப்பின் உலகத்துக்குப் பேரழிவு? 450 ஆண்டுகளுக்கு முந்தைய கணிப்பு!
கத்தோலிக தலைமை மதகுரு போப் மறைவுக்குப்பின் உலகத்துக்குப் பேரழிவு? 450 ஆண்டுகளுக்கு முந்தைய கணிப்பு பொய்யாகுமா?
போப் பிரான்சிஸ்(88) முச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பிப். 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், அவரது சிறுநீரகங்கள் லேசான பாதிப்புக்குள்ளாகியிருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டிருப்பதாகவும் ஞாயிற்றுக்கிழமை(பிப். 23) மருத்துவர்கள் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை(பிப். 25) நிலவரப்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் இரவு முழுவதும் நன்றாக தூங்கி ஓய்வெடுத்ததாகவும் மருத்துவமனை அறையில் இருந்தபடியே தமது தேவாலய பணிகளை மேற்கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, போப் பிரான்சிஸ் குணமடைய வேண்டி வாடிகன் சதுக்கத்தில் திங்கள்கிழமை(பிப். 24) மாலை திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் கடுங்குளிரையும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இரவில் பிரார்த்தனை மேற்கொண்டனர்.
இதனிடையே, தமது உடல்நிலை நலிவுற்றிருப்பதையடுத்து, தனக்குப்பின் அடுத்த போப்பை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை முடுக்கிவிட போப் பிரான்சிஸ் அறிவுறுத்தியிருப்பதாக வாடிகன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போப் பிரான்சிஸ் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போப் உடல்நிலை குறித்து சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்துச் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் இப்போது பேசுபொருளாகியுள்ளன.
‘நாஸ்ட்ரடாமஸ்’ என்றழைக்கப்பட்ட 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த தத்துவ ஞானியும் ஜோதிடருமான மைக்கேல் டே நாஸ்ட்ரெடேம், தமது காலத்துக்குப்பின் இந்த உலகில் நடக்கப்போகும் போர்கள், அரசியல் மாற்றங்கள், இயற்கைப் பேரழிவுகள் எனப் பலவற்றை முன்பே கணித்துக் கூறியுள்ளார். அவற்றில் பெரும்பாலான விஷயங்கள் நடைபெறத் தவறவில்லை என்பதால் போப் குறித்து அவர் கணித்துக் கூறியுள்ள விஷயங்களும் ஒருவேளை நிஜமாகுமோ? என்கிற சந்தேகம் வலுக்கத் தொடங்கியுள்ளது!

போப் குறித்து கணிப்பு: 16-ஆம் நூற்றாண்டில் நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ள ஆரூடத்தின்படி, “உலகின் மிக வயதானதொரு போப் மறைவுக்குப்பின்... குறைந்த வயதுடையதொரு ரோமன் அடுத்த போப் ஆக தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் அந்த பொறுப்பில் நெடுங்காலம் இருப்பதுடன், அதிக ஈடுபாடுடன் சேவையாற்றுவதையும் காண முடியும்” என்பதே அவரது கணிப்பு.
போப் மறைவுக்குப்பின் உலகத்துக்கு பேரழிவா?
நாஸ்ட்ரடாமஸ் போலவே அயர்லாந்தைச் சேர்ந்த ஆன்மிக ஞானி ‘மலாச்சி’ கணித்துக் கூறியுள்ள விஷயங்கள் சற்று அச்சத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளன.
12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மலாச்சி கணித்துள்ள ஆரூடத்தின்படி, “புனித ரோமன் தேவாலயத்தில் இறுதிக்கட்டமாக, ‘பீட்டர்’ என்ற ரோமன் போப் ஆக அமருவார். அவர் தம்மைப் பின்பற்றுபவர்களை பல இன்னல்களிலிருந்து நல்மேய்ப்பராக கடந்து செல்ல உதவுவார். அதன்பின், ஏழு குன்றுகளின் நகரம் அழிவைச் சந்திக்கும். இதுவே முடிவு” என்பதே அவரது கணிப்பு.
இதனைச் சுட்டிக்காட்டும் சிலர், புதிய போப் அதிலும் குறிப்பாக, ‘பீட்டர்’ என்ற பெயருடையவர் தேர்ந்தெடுக்கப்படும்பட்சத்தில், அது, உலக அழிவுக்குக் காரணமாக அமையலாம் என்கின்றனர்.
