வடகொரியா: சர்வதேச சுற்றுலாவுக்கு மீண்டும் அனுமதி!
வடகொரியாவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை நிறுத்திவக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு அரசு மீண்டும் அனுமதித்துள்ளது.
உலகளவில் பேரதிர்வை ஏற்படுத்திய கரோனா தொற்றால், 2020 ஆம் ஆண்டில் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகையை வடகொரியாவில் நிறுத்தி வைத்தது. இந்த நிலையில், நாட்டின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, வடகொரியாவில் மீண்டும் சர்வதேச சுற்றுலா பயணிகளை அனுமதித்திருப்பதாகத் தெரிகிறது.
சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயண நிறுவனம் ஒன்று, பிப்ரவரி 20 முதல் 24 வரை வடகொரியாவின் எல்லை நகரமான ராசனுக்கு 13 பேரை சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளது.
இதையும் படிக்க:அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் இடையே துளிர்விடும் மோதல்?
அதுமட்டுமின்றி, கடந்த 5 ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் நிறுத்தி வைக்கப்பட்டாலும், ரஷியாவுடனான நெருக்கம் காரணமாக 2024-ல் ரஷியாவைச் சேர்ந்த 100 பேர் மட்டும் வடகொரியாவில் சுற்றுலாவுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, வடகொரியாவின் வர்த்தகத்தில் முக்கியப் பங்களிக்கும் சீனாவுக்கும் அனுமதியளித்துள்ளது. கரோனா தொற்றுக்கு முன்னதாக, வடகொரியாவுக்கு சர்வதேச சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதில் சீனாவை சேர்ந்த நிறுவனங்கள்தான் 90 சதவிகிதத்தை பெற்றிருந்தன.