வெங்காயம் கிலோ ரூ. 18-க்கு விற்பனை: காய்கறிகள் விலையும் குறைந்தது
``போர் நடவடிக்கை, மக்களின் உரிமை அபகரிப்பு..'' - சிந்து நீர் ஒப்பந்த நிறுத்தம் பற்றி பாகிஸ்தான்!
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு சிந்து நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ள நடவடிக்கையை 'தண்ணீர் போர்' என்றும் சட்டவிரோதமானது என்றும் கூறியுள்ளது பாகிஸ்தான்.
இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பதிலுக்குபதிலாக பாகிஸ்தான் 1972 சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் மேல் பறக்கக் கூடாது என்றும் அறிவித்துள்ளது.

1971 விடுதலைப் போருக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்ட அமைதி ஒப்பந்தமான சிம்லா ஒப்பந்தம், எதிர்கால மோதல்களை நேரடி இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
"போர் நடவடிக்கை"
பாகிஸ்தான், "சிந்து நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒரு தலைபட்சமாக நிறுத்த முடியாது. இது உலக வங்கி போன்ற உலகளாவிய அமைப்புகள் சம்பந்தப்பட்டது. இந்த நடவடிக்கையை சட்டப்பூர்வமாக சவால் செய்வோம்" எனக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் அலுவலக அறிக்கையில் சிந்து நதியின் தண்ணீர் அந்த நாட்டின் 24 கோடி மக்களுக்கு உயிர்நாடியாக இருப்பதாகவும், அதில் அரசு அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
"பாகிஸ்தானுக்குச் சொந்தமான நீர் ஓட்டத்தை நிறுத்தவோ, திசைமாற்றவோ செய்யப்படும் நடவடிக்கையும், ஆற்றின் கீழ் பகுதியில் வாழும் மக்களின் உரிமையை அபகரிப்பதும் போர் நடவடிக்கையாக கருதப்படும். இதற்கு முழு பலத்துடன் பதிலளிக்கப்படும்." என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பதிலுக்கு பதில் நடவடிக்கைகள்
காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு பிரிவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF)தான் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்திய அரசு பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து தூதர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை வெளியேற்றவும், வாகா-அட்டாரி நில எல்லையை மூடவும், விசாக்களை (SVES) ரத்து செய்யவும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேப்போல பாகிஸ்தானும் இந்தியர்கள் வெளியேற வேண்டுமென அறிவித்துள்ளது.
1960 ஆம் ஆண்டு உலக வங்கியால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சிந்து நதியிலிருந்து 80% நீர் ஓட்டத்தை இந்தியா பாகிஸ்தானுக்கு மேல் நதிக்கரை நாடாக வழங்குகிறது. ஒப்பந்தத்தை இடைநிறுத்துவது என்ற முடிவு பாகிஸ்தானின் விவசாயத் துறையைப் பாதிக்கும்.
பாகிஸ்தான் என்ன சொல்கிறது?
பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார், பஹல்காம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பில்லை என உறுதியாக கூறியுள்ளார். "இந்தியாவிடம் எதாவது ஆதாரம் இருந்தால் அதை உலக அரங்கில் வைக்கச் சொல்லுங்கள்" எனப் பேசியுள்ளார்.
இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு வார்த்தைக்கு வார்த்தை பதிலளிப்போம் என பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
"இது ஒரு அரசியல் சூழ்ச்சியே அன்றி வேறில்லை. இந்தியா தனது சொந்த தோல்விகளுக்கு பாகிஸ்தான் மீது பழிபோட முயற்சிக்கிறது." என அவர் கூறியுள்ளார். மேலும் "தற்காப்புக்காகவே தயார்நிலையில் இருக்கிறோம்" என்றும் கூறியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், "இந்தியா நீண்டகாலமாக சிந்து நீர் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற முயற்சித்து வருகிறது. உலக வங்கியும் இதில் தலையிட்டிருப்பதால், அவர்களால் தன்னிச்சையாக இந்த முடிவை எடுக்க முடியாது." என்று பேசியுள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
