வெங்காயம் கிலோ ரூ. 18-க்கு விற்பனை: காய்கறிகள் விலையும் குறைந்தது
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ள நிலையில், ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.18-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு மகாராஷ்டிரம், ஆந்திரம் கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து நாள்தோறும் சராசரியாக 60 முதல் 65 லாரிகளில் வெங்காயம் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது, விளைச்சல் அதிகரிப்பு காரணமாக 80 முதல் 90 லாரிகளில் வரத்து உள்ளது.
இதனால் கடந்த வாரம் மொத்த விற்பனையில் ரூ. 40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயம் வியாழக்கிழமை ரூ.18 முதல் ரூ.20 வரை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25 முதல் ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், பிற காய்கறிகள் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ தக்காளி, சுரைக்காய் தலா ரூ.10, உருளைக் கிழங்கு, ஊட்டி கேரட், பீட்ரூட், காராமணி, பாகற்காய், முருங்கைக்காய், நூக்கல் தலா ரூ. 20, பச்சை மிளகாய் ரூ. 25, சின்ன வெங்காயம் ரூ.30, பீன்ஸ் ரூ.50, சவ்சவ் ரூ.10, முள்ளங்கி, வெள்ளரிக்காய் தலா ரூ.13, முட்டைகோஸ் ரூ.7, வெண்டைக்காய், கத்தரிக்காய் தலா ரூ.15, இஞ்சி ரூ.40, பூண்டு ரூ.130, எலுமிச்சை ரூ.130, வண்ணகுடமிளகாய் ரூ.90-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஓரிரு நாள்களில் காய்கறிகளின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.