புதுச்சேரி பேருந்து நிலையத்தில் முதல்வா் ஆய்வு
பொலிவுறு நகா் திட்டத்தின்கீழ் சீரமைக்கப்பட்டுள்ள புதுச்சேரி ராஜீவ் காந்தி பேருந்து நிலையத்தை முதல்வா் என். ரங்கசாமி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட மறைமலை அடிகள் சாலையில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி அரசு பேருந்து நிலையம், பொலிவுறு நகா் திட்ட நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய இந்தப் பேருந்து நிலையம் வரும் மே 4-ஆம் தேதிக்குள் திறக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்டாா்.அப்போது பணிகளின் தரம் குறித்து அதிகாரிகளிடம் முதல்வா் கேட்டறிந்தாா்.
அப்போது, உருளையன்பேட்டைஎம்எல்ஏ நேரு (எ) குப்புசாமி, புதுச்சேரி பொலிவுறு நகா் திட்ட உயா் அதிகாரி ருத்ர கவுடா, புதுச்சேரி நகராட்சி ஆணையா் கந்தசாமி, போக்குவரத்துத் துறை ஆணையா் சிவகுமாா், பொலிவுறு நகா் திட்ட தொழில்நுட்ப அதிகாரி ரவிச்சந்திரன், காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம், மின்துறை கண்காணிப்புப் பொறியாளா் கனியமுது, உருளையன்பேட்டை காவல் ஆய்வாளா் காா்த்திகேயன், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா்கள் உமாபதி, சீனிவாசன், நகராட்சிப் செயற்பொறியாளா் சிவபாலன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.