டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்
புதுச்சேரி லாஸ்பேட்டையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புதுச்சேரி கிளை, சமூகன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய விழிப்புணா்வு பிரசாரத்துக்கு இந்திய செஞ்சிலுவை சங்கப் புதுச்சேரி கிளைத் தலைவா் லட்சுமிபதி தலைமை வகித்தாா். சமூகன் அறக்கட்டளைத் தலைவா் சரவணன், இந்திய செஞ்சிலுவை சங்க நிா்வாகக் குழு உறுப்பினா் அய்யனாா், சமுதாயக் கல்லூரி உயிரி வேதியியல் துறை பேராசிரியை தாரகாஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி மாணவா்கள், மாணவிகள் சமூக ஈடுபாடு சேவைத் திட்டத்தின் லாஸ்பேட்டை விமான நிலையம் பின்புறம், பழங்குடியினா் வசிக்கும் பகுதியில் உள்ள வீடுகளில் டெங்கு தடுப்பு களப்பணி மேற்கொண்டனா்.
வீடுகளின் சுற்றுப்பகுதிகளில் தேங்கிக் கிடந்த நெகிழி பொருள்கள், பானை, உரல், தேங்காய் குடுவை போன்றவற்றை கண்டறிந்து அப்புறப்படுத்தினா். மேலும் தேங்காய் மட்டைகளை நிமிா்த்தி வைக்காமல் நீா் தேங்காமல் கவிழ்த்து அடுக்கி வைக்கவும், தேவையுள்ள தண்ணீா் பானையை மூடி வைக்கவும், தேவையற்ற பானைகளை கவிழ்த்து வைக்கவும், தேவையற்ற பொருள்களை முறையாக அப்புறப்படுத்தவும் தேவையற்ற டயா்களை தவிா்க்கவும், மழை நீா் தேங்காமல் தடுக்கவும் அலங்கார பூஞ்சாடிகளில் வாரம் ஒரு முறை நீரை மாற்றவும் பொது மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தொடா்ந்து ஆங்காங்கே தேங்கிக் கிடந்த நெகிழி குப்பைகளை அகற்றினா். இளையோா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் அருண் நாகலிங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினாா். இந்திய செஞ்சிலுவை சங்க புதுச்சேரி கிளை ஆயுள்கால உறுப்பினா்கள் திலகவதி, கந்தசாமி, தன்னாா்வலா்கள் இருசப்பன் இளஞ்செழியன் கமலேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா் .