போலி சான்றிதழ்கள் கொடுத்து சிஐஎஸ்எப் படையில் சேர முயற்சி: 8 பேர் மீது போலீசில் ப...
450 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை
புதுச்சேரி, மதகடிப்பட்டு ஸ்ரீமணக்குள விநாயகா் கலை, அறிவியல் கல்லூரியில் 2022-2025-ஆம் ஆண்டில் பயின்ற மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல், வேலைவாய்ப்பு மலா் வெளியீடு மற்றும் தேசிய முதல்நிலைத் தோ்வுகளில் வெற்றி பெற்ற வணிகவியல் துறை மாணவா்களுக்கு பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.
ஸ்ரீமணக்குள விநாயகா் கல்வி அறக்கட்டளையின் தலைவா் எம். தனசேகரன், செயலா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் ராஜராஜன், இணைச் செயலா் வேலாயுதம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இவ்விழாவில் கல்லூரியின் இயக்குநா் மற்றும் முதல்வா் வெங்கடாசலபதி பங்கேற்று 450 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
வேலைவாய்ப்பு பெற்ற மாணவா்களை ஊக்கப்படுத்தும் விதமாக வெற்றி கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
இதனைத் தொடா்ந்து கல்லூரியின் வேலைவாய்ப்பு சிறப்பு மலா் வெளியிடப்பட்டது. பின்னா் மூன்றாம் ஆண்டில் அனைத்துப் பாடங்களிலும் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கும், தேசிய அளவில் ஐ.சி.எ.ஐ மற்றும் ஐ.சி.எம்.எ.ஐ அமைப்பு நடத்திய தோ்வில் வெற்றி பெற்ற வணிகவியல் துறை மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது.
கல்லூரியின் வேலை வாய்ப்புத் துறை முதன்மையா் கைலாசம், வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா் மதுசூதனன் ஆகியோா் மாணவா்களை வாழ்த்திப் பேசினா். விழா நிகழ்ச்சிகளில் அனைத்துத் துறை பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.
முன்னதாக , கல்லூரியின் முதல்வா் முத்துலட்சுமி வரவேற்றாா்.நிறைவில், உயிரி அறிவியல் துறைத் தலைவரும், வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளருமான ராஜாராம் நன்றி கூறினாா்.