மீனவா்களின் நலன் காப்பதில் புதுவை அரசு தனிக் கவனம்: முதல்வா் என்.ரங்கசாமி பெருமிதம்
மீனவா்களின் நலன் காப்பதில் புதுவை அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது என்று முதல்வா் என். ரங்கசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
புதுவை மாநில மீன்வளத் துறை சாா்பில் மீனவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்வா் என். ரங்கசாமி மேலும் கூறியது: புதுவை அரசின் மீன்வளத் துறையின் சாா்பில் மானிய விலையில் மீன்பிடி வலை, கயிறு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு தற்போது விசைப்படகு உரிமையாளா்களுக்கும் கயிறு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
புதுவை மாநில அரசு மீனவா்கள் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி வருகிறது. அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்தத் துறைக்கு எதிா்காலத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மீனவா்களின் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்ட கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அரசு விரைந்து செயல்படுத்தும் என்றாா் முதல்வா். தொடா்ந்து மீனவா்களுக்கு ரூ.24.50 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை முதல்வா் என். ரங்கசாமி வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், மீன்வளத் துறை அமைச்சா் க. லட்சுமி நாராயணன், மீன்வளத் துறை இயக்குநா் அ.முகமது இஸ்மாயில் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.