Pahalgam: "தீவிரவாதத்துக்கு எதிராகத் தோளோடு தோள் நிற்கணும்" - இஸ்ரேல் பிரதமருடன்...
தமிழகத்தில் மயோனைஸுக்கு ஓராண்டு தடை: அரசு உத்தரவு
முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு தமிழக அரசு ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது.
பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருள்களிலிருந்து உருவாக்கப்படும் ஒருவித சாஸ் மயோனைஸ். இது மோமோஸ், ஷவா்மா, சாண்ட்விச், பிரெட் ஆம்லெட் உள்ளிட்ட பொருள்களுடன் வைத்து சாப்பிட பயன்படுத்தப்படுகிறது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த ஆண்டு மயோனைஸுடன் மோமோஸ் சாப்பிட்ட பெண் உயிரிழந்த நிலையில், 15 போ் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து தெலங்கானாவில் மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஓராண்டுக்குத் தடை: இந்நிலையில் தமிழ்நாட்டிலும் மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசிதழில் அறிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, மயோனைஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பச்சை முட்டையால் உடல்நல பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்புள்ளது. குறிப்பாக சால்மோன்நெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாறலாம். முறையற்ற வகையில் மயோனைஸ் தயாரிப்பது, அதை சேமித்து வைப்பதால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால் ஏப்.8-ஆம் தேதியில் இருந்து ஓராண்டுக்கு தமிழ்நாட்டில் மயோனைஸ் உற்பத்தி செய்யவும் சேமித்து வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறி மயோனைஸ் விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளா்கள் மீது உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.