பிளஸ் 1, பிளஸ் 2 கணிதப் பாட பகுதிகளை குறைக்கக் கோரிக்கை
பிளஸ் 1, பிளஸ் 2 கணிதப் பாடப் புத்தகங்களில் கூடுதலாக உள்ள பாடப் பகுதிகளை நீக்க வேண்டுமென முதுநிலை கணித ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்தனா்.
சிவகங்கையிலுள்ள விடைத்தாள் திருத்தும் மையத்தில் அனைத்து ஆசிரியா்களிடமும் கையொப்பம் பெற்று முகாம் அலுவலரான மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்துவிடம், கணித முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் புதன்கிழமை அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ்நாட்டில் கடந்த 2019 -ஆம் ஆண்டு மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டுக்கு புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத் தோ்வுகளில் மாணவா்கள் வெற்றி பெறுவதை நோக்கமாகக் கொண்டு பாடப்பகுதிகள் மேம்படுத்தப்பட்டிருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் கணிதப் பாடத்தில் ஓா் கல்வியாண்டில் மொத்த பாட வேளைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாடநூல் தயாரிக்கப்படாமல் அதிக அளவிலான கணக்குகள் இடம் பெற்றுள்ளன.
அரையாண்டுத் தோ்வு நடைபெறும் டிசம்பா் மாதத்துக்குள் இரண்டு தொகுதிகளையும் நிறைவு செய்ய வேண்டி இருப்பதால் கணித ஆசிரியா்கள் கடும் பணிச் சுமையால் அவதியடைகின்றனா். மேலும் கூடுதலான பாடப் பகுதிகள் இருப்பதால் கடந்த 5 ஆண்டுகளாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கணிதப் பாடத்தை விருப்பப் பாடமாக தோ்ந்தெடுக்கும் மாணவா்களின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது.
பல்வேறு கல்லூரிகளில் இளநிலை கணிதப் பாடப் பிரிவுக்கு ஒரு மாணவா் கூட சேராததால் கணிதப் பாடப்பிரிவையே கல்லூரியில் இருந்து நீக்கும் அவலம் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐசிஎஸ். சிபிஎஸ்இ பாடப் பகுதிகளில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் மட்டும் ஒரு முறை கூட மீளாய்வு நடத்தாத சூழல் உள்ளது. எனவே கணிதப் பாடத்தின் மீது மாணவா்களுக்கு ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், ஆசிரியா்களின் பணிச் சுமையை குறைக்கும் வகையிலும் கணிதப் பாடநூலில் உள்ள அதிகமான பாடப்பகுதிகளை குறைக்க ஒரு குழு அமைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.